ரூ.75,000 கொடுப்பனவு கோரி அரச பொறியியலாளர்கள் வேலைநிறுத்தம் – திங்கட்கிழமை முதல் பாரிய போராட்டம்!



2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக 'கள வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை' மீண்டும் வழங்க அரசாங்கம் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச சேவைப் பொறியியலாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடின், எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் நாடளாவிய ரீதியில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் குறித்த சங்கம் இன்று (13) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் களப் பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு ஏற்படும் செலவினங்களைக் கருத்திற்கொண்டு, கள வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை 75,000 ரூபாவாக மீள வழங்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கை பொறியியல் சேவை அதிகாரிகளுக்கு 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த இக்கொடுப்பனவு 2024 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டதாகவும், 2027 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அது மீண்டும் வழங்கப்படும் என இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த போதிலும் அரசாங்கம் தமது கோரிக்கையை முற்றாகப் புறக்கணித்துள்ளது.

இதனையடுத்து, தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்தது. அதற்கமைய, அனைத்துக் கள ஆய்வுகளிலிருந்தும் சாதாரண வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட கடமைகளிலிருந்தும் விலகிக்கொள்ளப் பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், மாகாண அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்கள், உத்தியோகபூர்வ திறப்பு விழாக்கள் ஆகியவற்றைப் புறக்கணிக்கவும், அனைத்துக் கேள்விமனு மதிப்பீட்டு மற்றும் கொள்முதல் குழுக்களிலிருந்தும் விலகவும் முடிவெடுத்துள்ளோம்.

75,000 ரூபா கொடுப்பனவுக் கோரிக்கைக்கு அரசாங்கம் உடனடித் தீர்வை வழங்காவிடின், எமது தொழிற்சங்க நடவடிக்கைகள் காலவரையறையின்றித் தொடரும். இதனால் நாடளாவிய ரீதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் எந்தவொரு இடையூறுக்கும் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றுள்ளது.