80,000 பட்டதாரிகள் வேலையின்றி இருப்பது ஏன்? – அரசாங்கத்திடம் சஜித் கேள்வி!



80,000 க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் காணப்படும் நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்று கூறி வருகின்றது.அவ்வாறு தொடர்ச்சியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தால் 80,000 வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில் இருப்பது எப்படி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (14) நிலையியற் கட்டளை 27, 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தாா்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் தகவலின் பிரகாரம், உயர்கல்வியில் உச்சத்தை எட்டியவர்களிடையே தெற்காசியாவிலேயே அதிகூடிய வேலையின்மை வீதமான 43வீதம் எமது நாட்டில் காணப்படுகின்றது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக பல தசாப்தங்களாகப் பணியாற்றியும் இன்றுவரை தேர்தல் வாக்குறுதியாகவே ஆசிரியர் சேவையில் இணைய முடியாத நிலையே காணப்படுகின்றது.

மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் வேலை காணப்படுவது ஒரு அம்சம் மாத்திரமே என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் ஏனைய விடயங்கள் உருவாகின்றன.இந்த 80,000 வேலையில்லாப் பட்டதாரிகளும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வதால், இவர்களை பயிலுநர்களாக ஆட்சேர்த்து, தற்கால வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ற மாதாந்த கொடுப்பனவை வழங்கி, அந்தந்தத் துறைகளில் அவர்களின் திறமையையும் தகைமையையும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கடந்த 3 தேர்தல்களிலும் இந்த வேலையில்லாப் பட்டதாரிகளே தற்போதைய அரசாங்கத்திற்கே அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.இந்த வேலைவாய்ப்புகளைப் பெறும் எதிர்பார்ப்பிலே இவ்வாறு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தனர். குறைந்தபட்சம் இவர்களுக்கு பயிலுநர் நியமனங்களை வழங்கி, பயிற்சிகளை வழங்கி, அரச சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.