மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கிய பெண் 9 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!



மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் 35ஆம் கிராமமான கண்ணபுரம் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் பெண்னோருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி கடந்த 09தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சேர்ந்த 59 வயதுடைய காத்திகேசு இராசலெட்சுமி என்பவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 05.11.2026ஆம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில், குறித்த பெண் தனது கணவருடன் மாடுகளைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியுள்ளது.

இதன்போது குறித்த பெண்ணைத் தாக்கிய யானை, அவரைப் பற்றைக்காட்டுக்குள் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளது.

யானையிடமிருந்து தப்பித்துக் கொண்ட கணவர், பின்னர் மனைவியைத் தேடிச் சென்றபோது பற்றைக்காட்டுக்குள் இருந்து அவரது சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து, கிராம மக்களின் உதவியுடன் அவர் உடனடியாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வெள்ளிக்கிழமை (13.11.2026) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலால் பொதுமக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் காட்டு யானைகளின் தாக்குதல்களால் உயிரிழப்புகளும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டு வருகின்ற போதிலும், இதற்கான நிரந்தரத் தீர்வு இதுவரை எட்டப்படவில்லை எனப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளில் நிரந்தர யானை வேலிகளை அமைத்து, பொதுமக்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.