சமூக ஊடகங்களில், குறிப்பாக Facebookஇல், இலங்கை மத்திய வங்கி ஆளுநரைப் போலச் சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் பரவி வருவதாக இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
குறித்த காணொளிகளில் மத்திய வங்கி ஆளுநர் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிதி ஆலோசனைகளை வழங்குவது போன்று தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி முதலீடுகளை மேற்கொள்ளவோ, அவற்றில் வழங்கப்படும் நிதி ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்படவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிதி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு வழிகள் ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும், போலி காணொளிகள் மற்றும் விளம்பரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.













