கொழும்பு வெள்ளம் தொடர்பான போலி AI காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மேயர் எச்சரிக்கை!



கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் காட்டுவதாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான காணொளிகளை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பால்தசார் எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள One Galle Face வணிக வளாகத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகக் காட்டும் பல AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த One Galle Face வணிக வளாகத்திற்குள் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய காணொளி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒன்று என உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான Fact Crescendo Sri Lanka உறுதிப்படுத்தியுள்ளது.

நவம்பர் 6 மற்றும் 11 ஆம் திகதிகளில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து பேஸ்புக் மற்றும் டிக்டொக் தளங்களில் பரவிய 14 விநாடிகள் கொண்ட குறித்த காணொளியில், வணிக வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வெள்ளநீர் காணப்படுவதுடன், நகரும் படிக்கட்டுக்கு (Escalator) அருகிலும் மற்றுமொரு கடைக்கு அருகிலும் மக்கள் நீரில் நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

குறித்த காணொளியை ஆய்வு செய்ததில், முகங்களின் இயற்கைக்கு மாறான தோற்றம், சீரற்ற எழுத்துருக்கள் மற்றும் இயல்பற்ற நீரின் அசைவுகள் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவால் மாற்றியமைக்கப்பட்டதற்கான பல அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக Fact Crescendo தெரிவித்துள்ளது.

மேலும், AI காணொளிகளைக் கண்டறியும் கருவி ஒன்றின் பரிசோதனையில், காணொளியின் முதல் காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு படத்துணுக்கு AI மூலம் உருவாக்கப்பட்டிருக்க 99 சதவீத வாய்ப்புள்ளதாகக் காட்டியுள்ளது. அதேவேளை, கூகுளின் SynthID Detector கருவி இரண்டாவது காட்சி மற்றும் ஒலிப்பதிவில் AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உள்ளடக்கத்திற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, Fact Crescendo அமைப்பு One Galle Face வணிக வளாகத்திலுள்ள பல கடைகளின் ஊழியர்களைத் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியுள்ளது.

இதன்போது, வணிக வளாகத்திற்குள் வெள்ளநீர் புகவில்லை அல்லது தேங்கவில்லை என்பதை ஊழியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், வாகனத் தரிப்பிடப் பகுதியில் சிறிதளவு நீர் காணப்பட்டதாகவும், அது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காணொளியில் காட்டப்பட்டதைப் போன்ற பாரிய வெள்ள நிலைமை அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், One Galle Face வணிக வளாகம் வெள்ளத்தில் மூழ்கியதாகப் பரப்பப்படும் தகவல் பொய்யானது என Fact Crescendo முடிவுசெய்துள்ளது.

எனினும், காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பின் பல வீதிகள் மற்றும் பகுதிகளில் உண்மையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த நவம்பர் 6ஆம் திகதி கொழும்பில் சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழை பதிவானதைத் தொடர்ந்து கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

அதேவேளை, நவம்பர் 11ஆம் திகதி பெய்த மழை காரணமாகவும் நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதுடன் போக்குவரத்துப் பாதிப்புகளும் ஏற்பட்டிருந்தன.