புதிய பயங்கரவாத மற்றும் குற்றத்தடுப்புச் சட்டமூலங்களுக்கு எதிராக நாடளாவிய போராட்டம் – தொழிற்சங்கங்கள் தீர்மானம்!



பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பது தொடர்பான சட்டமூலம், மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கான சட்டமூலம் ஆகியவற்றை எதிர்த்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார மற்றும் சமூகச் சூழலில் அரசாங்கத்தின் அடக்குமுறைப் போக்குகளுக்கும் அரசாங்க பயங்கரவாத சட்டம் அமுலாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று திங்கட்கிழமை (16) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் அனுபா நந்துல இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இலங்கை தோட்டப் பணப்பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டானி சதுர சமரசிங்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவை ஊழியர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்க்ஸ் வணிக மற்றும் தொழில்துறை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ். அமரசிங்க மற்றும் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரதான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு தற்போதைய நெருக்கடிக்களுக்குத் தீர்வுக்காணும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

தற்காலத்தில் நாட்டின் பொருளாதார நிலை சீர்குலைந்துள்ள நிலையிலும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு வரிச்சுமை மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளன.

இந்தச் சூழலில் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டியது தொழிற்சங்கங்களின் தலையாய கடமையாகும்.

அரசின் அடக்குமுறைச் செயற்பாடுகளையும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் அரச பயங்கரவாதமாகும். அதனை எதிர்த்துப் போராடுவதற்காக பேதங்களை மறந்து ஒரே மேடையில் கைகோர்த்துள்ளோம்

தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு வேலைப் பாதுகாப்பு மற்றும் தொழிற்சங்க சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக பல தொழிற்சங்கங்கள் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம்

தொழிற்சங்க போராட்டகளை ஒடுக்கச் செய்யும் சட்டங்கள் மற்றும் அரசாங்க தந்திரோபாயங்களுக்கு எதிராக சட்டரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம்.

மேலும் எதிர்காலத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விழிப்புணர்வுப் பிரசாரங்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளோம்.

பொதுமக்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.