இன்றைய வானிலை


வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக நிலைகொண்டிருந்த தாழமுக்கம் கடந்த இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த தாழ் அமுக்கமாக வலுவடைந்துள்ளது. இது திருகோணமலைக்கு வடகிழக்காக சுமார் 640 km தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது இலங்கையை விட்டு அப்பால் தொடர்ச்சியாக நகர்வதுடன் மேலும் தீவிரமடைந்து இன்று மாலையளவில் ஒரு சூறாவளியாக வலுவடையும். இந்த சூறாவளி வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியுடனும் தென் பகுதியுடனும் இணைந்ததாக காணப்படும். இது மேலும் தீவிரமடைந்து நாளை மாலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் ஒரு மிகப் பலம் வாய்ந்த சூறாவளியாக வலுவடையக்கூடும்.

ஆகையினால் வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பிராந்தியங்களுக்கு மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

மேலும் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் தொழில் நடவடிக்கைகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து அல்லது வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.