
இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகளை போன்று தனியார் பஸ் சேவைகளையும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். இந்த விடயத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் நாடு என்பதனால் அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கும். வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைக்கும் போது, போக்குவரத்து தொடர்பிலும் முடிந்தளவுக்கு வழங்கக்கூடிய பங்களிப்புகள் தொடர்பிலும் குறிப்பிட்டார்.
போக்குவரத்தை விரிவுப்படுத்தி, வீதிகளை அபிவிருத்தி செய்யும் போது பஸ் உரிமையாளர்களுக்கும் நன்மை கிடைக்கும். எவ்வாறாயினும் நாங்கள் எப்படி சென்றாலும் மக்கள் தமது பஸ்களில் ஏறுவார்கள் என்று இ.போ.ச நினைத்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
அதன்பின்னர் தனியார் பஸ்களும் அவ்வாறு நினைத்தது. அதுவும் நடக்கவில்லை. அவ்வாறு மக்கள் எல்லா பஸ்களிலும் ஏறுவதில்லை.
அண்மையில் மெதவாச்சியில் விபத்தொன்று நடந்தது. அதில் 70 பேர் காயமடைந்ததுடன்,நால்வர் உயிரிழந்தனர். அதில் விபத்தில் சம்பந்தப்பட்ட கெப்பட்டிகொல்லாவ பஸ் சாரதி கஞ்சா மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளது.
தமது பஸ்ஸின் சாரதி எப்படிப்பட்டவர் என்பதனை பஸ் உரிமையாளர்களுக்கு தெரியும். இதனால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச மற்றும் தனியார் பஸ் துறைகளை அபிவிருத்தி செய்வோம். ஆனால் இதன்போது சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர்களும் கொண்டுவரப்படும் முறைமைகளுக்கு இணங்க வேண்டும் என்றார்.












