
லாப்ஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான நுகர்வோர் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் இக்காலப்பகுதியில், நேற்றைய தினம் நள்ளிரவு முதல் இந்த திடீர் விலை அதிகரிப்பு நுகர்வோரை மேலும் நஸ்த்திக்குள்ளாக்கியுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள அரசாங்கமும், ஜனாதிபதியும், நிதி அமைச்சரும் நாட்டின் நுகர்வோரைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளதுடன், எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கும் நுகர்வோருக்கும் தெளிவான முறையும் வெளிப்படைத்தன்மையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இந்த தன்னிச்சையான எரிவாயு விலை அதிகரிப்பை இரத்துச் செய்யத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதோடு, இந்த விலை அதிகரிப்பு தொடர்ந்தும் நுகர்வோர் மத்தியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், இதற்கு எதிராக நுகர்வோர் அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.












