திறைசேரியில் நிதி இருந்தும் மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாது? – சாணக்கியன் கேள்வி!



திறைசேரியில் நிதி இருக்குமாயின் ஏன் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது ? தேர்தலை இலக்காகக் கொண்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் முயற்சித்தால், அது அரசாங்கத்துக்கே எதிரானதாக அமையும். பணவீக்கம் உயர்வடைந்துள்ள பின்னணியில் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் எவ்வித முன்மொழிவுகளும் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நடுத்தர மக்களுக்கு நேரடியாக என்ன கிடைத்துள்ளது எ ன்பதை ஆராய வேண்டும். பணவீக்கம் அதிகரித்துள்ள பின்னணியில் வாழ்க்கைச் செலவுகள் சடுதியாக அதிகரித்துள்ளன. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வரும் போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட அரசாங்கத்தையே பொறுப்பேற்றோம் என்று பிரதமர் குறிப்பிடுகிறார்.ஆனால் அன்று டொலருக்கான ரூபாவின் பெறுமதி 283 ஆக காணப்பட்டது.ஆனால் தற்போது அது 330 ரூபா அளவில் உயர்வடைந்துள்ளது. இதற்கு வெளியக காரணிகளும் தாக்கம் செலுத்தியுள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுகையில் திறைசேரியின் கையிருப்பு எந்தளவுக்கு அதிகரித்துள்ளது. வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். வரி விதிப்பின் ஊடாகவே திறைசேரி நிரம்பியுள்ளது.

புதிதாக முதலீடுகள் ஏதும் நாட்டுக்கு வரவில்லை. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் எத்தனை சதவீதம் செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியம் காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளும் குறைவடையவில்லை., அரச மற்றும் தனியார் துறையின் சம்பளத்தையும் அதிகரிக்கவில்லை.

2028 மற்றும் 2029 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேர்தலை இலக்காகக் கொண்டு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்து தற்போது நிவாரணம் வழங்கலை மறுத்துள்ளது.

அரசாங்கம் நிவாரணம் வழங்கும் போது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிதைவடையலாம் ஏனெனில் மக்கள் பொருளாதார மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். உழைக்கும்போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்துக்கு அதிகமாக சம்பளம் பெறும் தரப்பினருக்கு மாத்திரமே நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி கூரைமேல் பொறுத்தும் சக்தி வள பயன்பாட்டாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சலுகை நிதி வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அடிப்படையாகக் கொண்டு 14 ஆயிரம் பேருக்கு மாத்திரம் இந்த சலுகை தொகையை வழங்க முடியும்.

ஜனாதிபதி 2030 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக நிகழ்த்தினால் நன்றாக இருக்கும். அரச சேவையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. அரச சேவையாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அது அடுத்த ஆண்டு ஜுலை மாதத்துக்கு பின்னர் தான் வழங்கப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் மகன் பசியுடன் உள்ளார். அப்பாவின் வசம் 50 ஆயிரம் ரூபா உள்ளது. உணவுக்காக மகன் பணம் கேட்கும்போது , தற்போது பணம் வழங்க முடியாது.அடுத்த ஆண்டே வழங்க முடியும் என்று தந்தை குறிப்பிடுகிறார்.இவ்வாறான நிலைதான் இந்த வரவு செலவுத் திட்டத்திலும் குறிப்பிடப்படுகிறது.

திறைசேரியில் நிதி இருக்குமாயின் ஏன் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது ? தேர்தலை இலக்காகக் கொண்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் முயற்சித்தால், அது அரசாங்கத்துக்கே எதிரானதாக அமையும்.

வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனை நாங்கள் வரவேற்கிறோம்.பாடப்புத்தகங்கள் மீதான வெற் வரி நீக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தான் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் தான் உள்ளது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. மக்களின் நலன்புரி சேவையை காட்டிலும் பிரதான விடயங்கள் ஏதும் கிடையாது.வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை செலவழிக்க வேண்டும். அரச சேவையாளர்கள் தற்போது அச்சமடைந்துள்ளார்கள்.இது தான் உண்மை என்றார்.