ஆரையம்பதியில் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீவைப்பு – பெண் உயிரிழப்பு ; உறவினர் கைது !


மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆரையம்பதி, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய சின்னத்தம்பி கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலை சுமார் 4 மணியளவில் குறித்த பெண் தனது வீட்டின் முன்பகுதியில் கதிரையில் அமர்ந்திருந்தபோது, வீட்டின் பின்புறமாக வந்த அவரது உறவினர் ஒருவர், அவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண்ணை அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர், மறுநாள் புதன்கிழமை (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் உயிரிழந்த பெண்ணின் கணவரது சகோதரியின் கணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், வியாழக்கிழமை (05) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.