
இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய பதவிகளின் கடமைகளை, வேறு சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைப்பதைத் தவிர்க்குமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்குப் புதிய சுற்றறிக்கை ஒன்றை விடுத்து, அமைச்சின் செயலாளர் எஸ். அலோகபண்டார இதனை அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய சில நிறுவனங்களின் சேவைத் தலைவர்களால், சேவைக்குரிய பதவிகளின் கடமைகள் வேறு சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகளால் குறித்த பதவிகளின் ஊடாக எதிர்பார்க்கப்படும் தரம், பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்சார் தரம் என்பன சரியான முறையில் நிறைவேற்றப்படுவதில்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, தொழில்நுட்ப சேவை பதவிகளில் வெற்றிடங்கள் காணப்படுமாயின், அவற்றைச் சேவைப் பிரமாணக் குறிப்பு மற்றும் ஆளமர்த்தல் நடைமுறைகளுக்கு இணங்க முறைப்படி நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறித்த சுற்றறிக்கையின் ஊடாக மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.










.jpg)

