கிளிப்பிள்ளை போன்று அறிவிப்புகளை வெளியிட்ட அநுரவின் வரவு செலவுத் திட்டம் வெறும் வெற்றுப் பேச்சு – சீலரத்ன தேரர்
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க கிளிப்பிள்ளை பேசுவதைப் போன்று பல்வேறு விடயங்களைப் பட்டியலிட்டு முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் வெறும் வெற்றுப் பேச்சாகும். அதில் அறிவிக்கப்பட்டுள்ள எந்தவொரு திட்டமும் மக்களுக்கு நடைமுறைச் சாத்தியமான நன்மைகளை வழங்கப்போவதில்லை. மக்களின் வாழ்க்கைச் சுமைகளைக் குறைப்பதற்குப் பதிலாக வரிகள் மற்றும் விலையேற்றங்கள் மூலம் அவர்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள அரசாங்கம், தனது வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தவறியுள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.
கொழும்பு, ஜனசெத பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்திக்கு 159 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொடுத்து மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கினார்கள்.
மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த அரசாங்கத்தை மக்கள் தெரிவுசெய்தார்கள். ஆனால், இன்று மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது? வரவு செலவுத் திட்டத்தைக் கவனிக்கும்போது, தாங்கள் செய்தது தவறு என மக்கள் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எரிவாயு, டீசல், பெற்றோல் வரிசைகளில் நின்ற மக்கள், அந்த நிலைமையை மாற்றுவதாகக் கூறிய தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். வீதிகள் தோறும் சுவரொட்டிகளும் பதாகைகளும் ஒட்டப்பட்டன. பிக்குகள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தார்கள். பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் ஆட்சியைப் பெற்றுக்கொடுக்கப் பாடுபட்டார்கள். ஆனால், இன்று அதே மக்களுக்கு எரிவாயு விலையை அதிகரித்து அரசாங்கம் தனது உண்மையான முகத்தைக் காட்டியுள்ளது.
குறிப்பாக, கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் எரிவாயுவை நம்பி வாழும் மக்களுக்கு மாற்று வழியில்லை. கிராமப்புறங்களில் விறகுகளைப் பயன்படுத்தி உணவு சமைக்க முடியும். ஆனால், நகர்ப்புற மக்களின் நிலை அவ்வாறானதல்ல.
எரிவாயு விலை உயர்வினால் உணவக உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சோற்றுப் பொதியைக்கூட வாங்கிச் சாப்பிட முடியாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. தேநீர் அருந்துவதற்கும் மக்கள் சிரமப்படுகின்றனர். முன்னர் பருப்பு, பாண் வாங்கிச் சாப்பிட்டு வாழ்க்கையைக் கொண்டுசென்ற ஏழை மக்களால் இன்று அவற்றைக்கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 2.2 டிரில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்ற நிலையில், அதனை எவ்வாறு ஈடுசெய்யப்போகிறார்கள் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொண்ட பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
2028ஆம் ஆண்டில் மீளச் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்துவதற்கான நிதியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளப்போகிறார்கள்? திறைசேரியில் பணம் நிரம்பி வழிவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார். அவ்வாறு பணம் இருந்தால் ஏழை மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்கள் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
மறுபுறம், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள், டீசல், பெற்றோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீது வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. இதனால் பாண், கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் உயர்கின்றன. மக்களிடமிருந்து இவ்வாறு பணத்தைப் பெற்றுக்கொண்டு வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை எவ்வாறு ஈடுசெய்யப்போகிறார்கள் என்பதற்குப் பதிலளிக்க வேண்டும்.
ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும்போது கிளிப்பிள்ளை பேசுவதைப் போன்று பல அறிவிப்புகளை வேகமாக வெளியிட்டார். ஆனால், அவற்றில் எத்தனை நடைமுறைப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகும். மின்சார முச்சக்கர வண்டிகள், மின்சாரத் தொடருந்துகள் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான முன்னேற்றங்கள் இல்லை. பழைய திட்டங்களையே மீண்டும் முன்வைக்கின்றனர்.
வாகனங்களின் விலைகளைக் குறைப்பதாகவும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கு வழிவகுப்பதாகவும் தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி வழங்கப்பட்டது. இளைஞர்களும் யுவதிகளும் அந்த எதிர்பார்ப்பிலேயே வாக்களித்தனர். இன்று அவர்களிடம், உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன்.
நாட்டையும் மக்களையும் பௌத்த சாசனத்தையும் பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. இறுதியில் மனித மாமிசத்தைக்கூட விற்பனை செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும் என்றார்.













