செலவிடப்படாத நிதியைச் சேமிப்பாகக் காட்ட அரசாங்கம் முயற்சி– நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு


அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளால் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, பால்மா மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு போதுமான வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், இந்தியாவின் அதானி குழுமம், சீனாவின் China Merchants நிறுவனம் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர்களுடன் தொடர்புடைய துறைமுகம் மற்றும் கப்பல் கட்டுமானத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, புதிய நிர்வாகப் பிரிவுகளை உருவாக்குவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு மேலதிகத் தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

இதேவேளை, விளையாட்டு, விவசாயம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.

அனர்த்த நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பெருமளவிலான நிதி, நிர்வாகத் தாமதங்கள் காரணமாகச் செலவிடப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தவறியதால் செலவிடப்படாமல் எஞ்சிய நிதியை, வீண் செலவுகளைக் குறைத்துச் சேமித்த பணமாக அரசாங்கம் காட்ட முயற்சிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.