
தபால் துறையைத் தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் உடனடியாகக் கைவிடப்படாவிடின், தபால் துறையையும் நாட்டையும் பாதுகாப்பதற்காகத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கவும், பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் தாம் தயாராக உள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.கே.சி. நிரோஷன எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய அரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த அரசாங்கத்திடம் நாம் எதிர்பார்க்காத சில விடயங்கள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, வாழ்க்கைச் செலவு பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அரச சேவையிலுள்ள உயர் அதிகாரிகளுக்கு மாத்திரமே பசி தெரிவதாக ஜனாதிபதியும் நிதியமைச்சரும் கருதுவது போல் தெரிகிறது. இது சாதாரண தொழிலாளர்கள் முதல் அனைத்து அரச உத்தியோகத்தர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், தபால் திணைக்களம் எதிர்நோக்கியுள்ள பாரிய ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, ஆட்சேர்ப்புகளைக் குறைத்து, கனிஷ்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, கடந்த கால அரசாங்கங்களைப் போலவே தபால் துறையைத் தனியார் துறையுடன் இணைக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், தபால் துறையின் 'குரியர்' (Courier) சேவையைத் தனியார் துறையுடன் இணைத்தால், சட்டரீதியான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்கான பிரதான இடமாகத் தபால் துறை மாறும் அபாயம் உள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை ஜனாதிபதி உடனடியாகக் கைவிட வேண்டும்.
மக்களுக்குப் பயனுள்ள, அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டித்தரும் வினைத்திறனான துறையாகத் தபால் திணைக்களத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை எமது சங்கம் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது. மாறாக, தனியார்மயமாக்கல் கொள்கை முன்னெடுக்கப்பட்டால், உயிரைப் பணயம் வைத்தேனும் வீதிகளில் இறங்கிப் போராட நாம் தயங்கமாட்டோம் என்றார்.












