எதிர்க்கட்சியின் யோசனைகளை நிறைவேற்றினால் ஜனாதிபதியுடன் தேநீர் அருந்தத் தயார் – சுஜித் சஞ்ஜய!



வரவிருக்கும் வரவு செலவுத் திட்டம் கடந்த காலங்களைப் போலவே பொய் வாக்குறுதிகளைக் கொண்ட ஒன்றாகவே அமையும். இல்லாவிடின் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நிறைவேற்றினால், தாம் மகிழ்ச்சியுடன் சென்று ஜனாதிபதியுடன் தேநீர் அருந்தத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (12) ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பும், எதிர்க்கட்சியில் இருந்தபோதும், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கடந்த இரு வரவு செலவுத் திட்ட அறிக்கைகளிலும் சுமார் 160 முதல் 170 வரையிலான பொய் வாக்குறுதிகளே இடம்பெற்றிருந்தது. தற்போது நாட்டில் பணவீக்கம் 89.8 சதவீதமாக உயர்ந்துள்ள சூழ்நிலையில், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை.

அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னரும், கொள்கை விளக்கவுரைகளிலும் வழங்கிய பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. கப்பலில் இருந்து நேரடியாகக் குறைந்த விலையில் எரிபொருள் வழங்குவதாகக் கூறியமை, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறியமை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பெறுமதி சேர் வரியை குறைப்பதாக வாக்குறுதியளித்தமை என்பன இதில் அடங்கும்.

மேலும், அரச ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் பட்டதாரிகளுக்கு 35,000 வேலைவாய்ப்புகளை வழங்குவதாகத் தெரிவித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பல முக்கிய சட்டமூலங்கள் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

பொது-தனியார் பங்களிப்புச் சட்டம், முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டம், புதிய வர்த்தக வியாபார முகாமைத்துவச் சட்டம், தேசிய தணிக்கைச் சட்டத் திருத்தம், டிஜிட்டல் அமைச்சை நிறுவி புதிய டிஜிட்டல் சட்டத்தைக் கொண்டுவருதல் மற்றும் சக்தி மாற்றச் சட்டம் போன்ற எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

70 கால சாபத்தை ஒழித்து, ஊழலை முற்றாக இல்லாதொழிப்பதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த போதிலும், தற்போதைய ஆட்சியில் பாரிய நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான குழுவின் அறிக்கை இரண்டு வருடங்கள் ஆகவுள்ள நிலையிலும் வெளியிடப்படவில்லை.

திறைசேரியிலிருந்து காணாமல்போன 2.5 பில்லியன் டொலர்கள் தொடர்பில் தணிக்கை அறிக்கையோ மத்திய வங்கியோ எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பதுடன், இது தொடர்பாகத் தொடர்புடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஞ்சல் திணைக்களத்தில் 6 இலட்சம் டொலர்கள் காணாமல்போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை. மேலும், நிலக்கரி கொள்முதல் முறைகேடு காரணமாக 18 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தணிக்கை அறிக்கை, பாராளுமன்றக் கண்காணிப்புக் குழு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாராளுமன்றச் சபாநாயகர்கள் தொடர்பிலும் பல்வேறு சர்ச்சைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

முதல் சபாநாயகர் போலியான சான்றிதழைச் சமர்ப்பித்தமை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இரண்டாவது சபாநாயகருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அவர் இரு உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துவதுடன் அவரது செயலாளருக்கும் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து மெத்தைகள், தலையணைகள் கூடக் காணாமல்போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் திறைசேரியில் அதிகமாக நிதி இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், அது மக்களிடம் அதிக வரிகளை அறவிட்டும், அபிவிருத்திச் செலவினங்களில் 30 சதவீதம் கூடச் செலவிடாமல் மக்களைப் பட்டினியில் போட்டே நிதி சேமிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் தந்தை வருமானத்தைச் சேமிப்புப் பெட்டியில் பூட்டி வைத்துவிட்டு குடும்பத்தை நோகடிப்பது போன்ற கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது. மேலும், அதிவேக நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் அல்லது 3 கிலோமீட்டருக்கு ஒரு பாடசாலை போன்ற எவ்வித அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்காமல், ஜனாதிபதி தெருச்சந்தி கூட்டங்களை நடத்துவதிலும் துணிக்கடைகளைத் திறந்து வைப்பதிலும் நேரத்தைச் செலவிடுகிறார்.

மத்திய கிழக்கில் கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு அரசாங்கம் மட்டுமே தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகள் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்த நடவடிக்கைகளுமே இதற்கு முக்கிய காரணம்.

எதிர்க்கட்சித் தலைவர் மீது திட்டமிட்ட முறையில் சேறுபூசல்கள் நடத்தப்பட்டாலும், அவர் மக்கள் நலனுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார். இறுதியாக, வெறுமனே ஜனாதிபதியுடன் தேநீர் அருந்துவதை விட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அரசாங்கம் வழங்குவதே முக்கியமானது என்றும், மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களை அரசாங்கம் வழங்கி எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நிறைவேற்றினால், தாம் மகிழ்ச்சியுடன் சென்று ஜனாதிபதியுடன் தேநீர் அருந்தத் தயார் என்றார்.