பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்பு!



அன்டிகுவா மற்றும் பர்புடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமான பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டின் (CHOGM 2026) நிறைவேற்று அமர்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

இவ்வமர்வின் போது, பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் முக்கிய உலகளாவிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து தீவிர கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

அத்துடன், பொதுவான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும் பகிரப்பட்ட இலக்குகளை அடைவதற்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் கூட்டுப்பங்களிப்பையும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, பொதுநலவாய அமைப்புக்குள் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரித்தல், தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் நிதியளிப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தல், சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் சிறந்த ஒருங்கிணைப்பை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், காலநிலை மீள்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்திக்காக, குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் காலநிலை நிதிப் பங்களிப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

பொதுநலவாயத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் முக்கிய பங்கை அங்கீகரித்த தலைவர்கள், அவர்களுக்கான திறன் அபிவிருத்தி, தொழில்முனைவு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், மீள்தன்மையைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொதுநலவாயம் முழுவதும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றுக்கான கூட்டு அணுகுமுறைகளை ஆராய்வதற்கும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் இம்மாநாடு ஒரு முக்கியமான தளமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.