ஒழுக்கமற்ற, இலக்கற்ற போராட்டங்கள் நாட்டில் அராஜகத்தை உருவாக்கும் – ஜனாதிபதி அநுர எச்சரிக்கை!



மக்களின் பிரச்சினைகளுக்காக முன்னெடுக்கப்படும் அமைப்புரீதியான, ஒழுக்கமுடைய மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட போராட்டங்கள் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் நன்மை பயப்பவை. எனினும், இலக்கற்றதும் அமைப்பற்றதுமான போராட்டங்கள் நாட்டில் அராஜக நிலைமையை உருவாக்குவதுடன், மக்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நிறுவனர் ரோஹண விஜேவீர உள்ளிட்ட உயிரிழந்த கட்சி உறுப்பினர்களை நினைவுகூரும் 37ஆவது நவம்பர் வீரர் நினைவேந்தல் கொழும்பு விகாரமாதேவி திறந்தவெளி அரங்கில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் மற்றும் இரு கட்சிகளினதும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் போராட்டங்கள் உருவாகுமானால், அவை அமைப்புரீதியாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும், ஒழுக்கத்துடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறான போராட்டங்கள் நாட்டுக்கும் நல்லது; அரசாங்கத்துக்கும் நல்லது. அவற்றை நாம் ஒருபோதும் தவறானவையாகக் கருதவில்லை.

அரசாங்கம் ஏதேனும் விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது, அந்தக் கொள்கை மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் கருதினால், அவர்கள் அமைப்புரீதியாக ஒன்றிணைந்து போராடுவதில் தவறில்லை. ஏனெனில், விவசாயிகளுக்கென அமைப்புகள் உள்ளன. அவர்களுக்குத் தெளிவான நோக்கமும் தொலைநோக்குப் பார்வையும் ஒழுக்கமும் இருக்கின்றன. அவ்வாறான போராட்டங்கள் ஒருபோதும் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால், ஒழுக்கமற்ற, அமைப்பற்ற, இலக்கற்ற, நோக்கமற்ற மற்றும் திசையற்ற போராட்டங்களே நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவை இறுதியில் அராஜக நிலைமையையே உருவாக்குகின்றன.

தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே உருவாகும் போராட்டங்களைப் பார்க்கும்போது, நாளை என்ன நடக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்படுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றார். மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒருவர் தடிகளைக் கையில் எடுத்துச் சுழற்றுகின்றார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் எத்தகைய நிலைமையை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நாளை எத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறும் என்பதை எவராலும் கணிக்க முடியாத அராஜகச் சூழல் உருவாகுவது நாட்டுக்குப் பாதிப்பானதாகும். எனவே, அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு நாம் ஆதரவாக இருந்தாலும், அந்த விமர்சனங்கள் தொலைநோக்குப் பார்வையுடனும், அமைப்புரீதியாகவும், ஒழுக்கத்துடனும் அமைய வேண்டும்.

அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும் எதிர்த்துப் போராடுவதற்கும் மக்களுக்கு உரிமையுள்ளது. ஆனால், நாளை நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன பாதிப்பை ஏற்படுத்துவார்கள் என்று கணிக்க முடியாத வகையிலான நடவடிக்கைகளைப் போராட்டங்கள் என்று அழைக்க முடியாது. அவை நாட்டில் அராஜகத்தை உருவாக்கும் நடவடிக்கைகளாகும்.

எனவே, மக்களை அராஜக நிலைமைக்குள் தள்ளும் இத்தகைய அரசியல் போக்குகள் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதனைத் தடுப்பதற்குத் தேவையான ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் தலையீட்டைக் கொண்ட இயக்கமாக தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் செயற்பட வேண்டும்.

கிராமங்களில் இவ்வாறான அராஜக நிலைமைகளுக்கு நாம் இடமளிக்க முடியாது. அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் கிராமங்கள் தோறும் விரிவான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தோம். பெண்கள் சங்கங்கள், இளைஞர் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள் எனப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைத்தோம். நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தொலைநோக்குப் பார்வையுடன் சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டோம்.

ஆனால், அரசாங்கத்தைக் கைப்பற்றிய பின்னர் சில சந்தர்ப்பங்களில் அரசியலை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் மாத்திரம் எம்மை மட்டுப்படுத்திக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. அது சரியான அணுகுமுறையல்ல.

அரசாங்கத்தை நடத்துவதற்கெனத் தனியான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் முதல் கிராம அலுவலர் வரையிலான அரச நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த நிர்வாகக் கட்டமைப்பை மக்களுக்குச் சாதகமான முறையில் செயற்படுத்துவதற்காக மக்களின் கருத்துகள், தலையீடுகள் மற்றும் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதேவேளை, எமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மற்றுமொரு முக்கியமான பொறுப்பு, அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்கு அப்பால் மக்களிடையே அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகும். குறிப்பாக, கிராம மட்டங்களில் புதிய அரசியல் உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.

அதன் ஒரு பகுதியாகவே கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் கூட்டத் தொடர்களை நடத்தினோம். எதிர்காலத்திலும் இவ்வாறான கூட்டங்களை நடத்தி மக்களை அமைப்புரீதியாக ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சக்திகள் பலவீனமடைந்துள்ளன. அந்தப் பலவீனம் அவர்களை நிர்க்கதியான நிலைக்குத் தள்ளியுள்ளது. அந்த நிலை மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. மன அழுத்தம் நிதானத்தைச் சிதைக்கின்றது. நிதானம் சிதைவடையும்போது முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.

பலவீனம் நிர்க்கதியான நிலையை உருவாக்குகின்றது. நிர்க்கதி மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. மன அழுத்தம் அமைதியின்மையை உருவாக்குகின்றது. அமைதியின்மை கட்டுப்பாடற்ற நடத்தைக்கு இட்டுச் செல்கின்றது. தற்போது எமக்கு எதிராக உருவாகியுள்ள அரசியல் சூழலின் தன்மை இதுவாகும்.

எனினும், இவ்வாறான அராஜகத்தன்மை கொண்ட பலவீனமான போராட்ட இயக்கங்களைவிட நீண்ட வரலாற்றையும் வலுவான அனுபவங்களையும் கொண்ட எமது அரசியல் இயக்கம் அவற்றைத் தோற்கடித்து, இந்த அரசாங்கத்தையும் எமது ஆட்சியையும் அரசியல் சித்தாந்தத்தையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்குள்ளது.

இன்று எமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு கடந்த காலங்களில் இருந்த பொறுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். கட்சியைக் கட்டியெழுப்புதல், அரசியல் போராட்டங்களை எதிர்கொள்ளுதல், அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்தல், தேர்தல்களில் போட்டியிடுதல், கட்சி தடைசெய்யப்படுதல் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.

கடந்த அறுபது ஆண்டுகளில் ஏறத்தாழ 59 ஆண்டுகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியல் போராட்டத்திலேயே எமது பெரும்பாலான செயற்பாடுகள் அமைந்திருந்தன. தற்போது நாம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளோம். எனவே, எமது சவால்களையும் பொறுப்புகளையும் எமது இலக்குகளை நிறைவேற்றும் திசையில் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.

அதற்காக முன்னரை விடப் புதிதாகச் சிந்திக்க வேண்டும். புதிய சூழலுக்கு ஏற்ப எம்மை மாற்றியமைக்க வேண்டும். புதிய சவால்களை வெற்றிகொள்வதற்கான மனநிலையுடனும் செயற்பாட்டுத் திறனுடனும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

முன்னர் எமது அரசியல் செயற்பாடுகளில் எமது பொறுப்புணர்வின் பெரும்பகுதி கட்சியுடன் தொடர்புடையதாக இருந்தது. கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவும், குறைபாடுகளைப் பேசித் தீர்க்கவும், மாற்றங்களை அடையாளம் கண்டு அவற்றைச் செயற்படுத்தவும் எமக்கு வாய்ப்பிருந்தது.

ஆனால், அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் நிலைமை மாறியுள்ளது. இப்போது எமது முதன்மையான பொறுப்பும் கடப்பாடும் மக்களுக்கானதாகும். அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் நாம் பொறுப்புக்கூற வேண்டும். கடந்த கால ஆட்சியாளர்கள் இதனைச் செய்யவில்லை என்று கூறிக்கொண்டு எம்மால் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.

இந்த நேரத்தில் வாழும் மக்களுக்கு இந்த நேரத்தில் நாம் பொறுப்புக்கூற வேண்டும். மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். எமக்கான அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். எனவே, அந்த மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடமை எமக்குள்ளது.

எம்மிடம் உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் தலைவர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுடன் இணைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு உள்ளன. எனவே, எமது ஒவ்வொரு செயற்பாடும், முடிவும், அறிக்கையும் மக்களின் முன்னிலையில் பொறுப்புக்கூற வேண்டியவையாகும்.

எமது செயற்பாடுகள், நடவடிக்கைகள், கருத்துகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்தையும் முன்னரை விடவும் அதிக பொறுப்புணர்வுடன் முன்னெடுக்க வேண்டும். முன்னர் எமது பொறுப்பின் பெரும்பகுதி கட்சியை நோக்கியதாக இருந்தது. இன்று எமது பொறுப்பின் பெரும்பகுதி மக்களை நோக்கியதாக மாறியுள்ளது.

மக்களுக்குப் பொறுப்புக்கூறும் அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். மக்களுக்கு எம்மை விமர்சிப்பதற்கும், எம்மிடம் கேள்வி கேட்பதற்கும், எமக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் உரிமையுள்ளது. ஏனெனில், மக்களின் நலனுக்காகச் செயற்பட வேண்டிய பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இதற்கு முன்னர் எமது நாட்டில் ஆட்சியாளர்களைக் கண்டு மக்கள் அச்சமடைந்து வாழும் அரசியல் கலாசாரமே காணப்பட்டது. பிரதேச சபைத் தலைவரைக் கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனர். பிரதேச சபை உறுப்பினரைக் கண்டு அவரைச் சூழவுள்ள மக்கள் அச்சமடைந்தனர். அமைச்சர்களைக் கண்டு அந்தப் பிரதேச மக்கள் அச்சமடைந்தனர். ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு அச்சத்தையும் அடிபணிதலையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இந்த உறவுமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும். புதிய உறவுமுறை என்பது மக்கள் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்கக்கூடியதாகவும், அவர்களை விமர்சிக்கக்கூடியதாகவும், அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இவ்வாறான புதிய அரசியல் கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும். மக்களை அச்சுறுத்துவதோ, அவர்களை அடிபணியச் செய்வதோ எமது நோக்கமல்ல. ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்கும் மக்களையும், ஆட்சியாளர்களை விமர்சிக்கும் மக்களையும் உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

எனினும், அவ்வாறான விமர்சனங்கள் நாகரிகமான சமூகத்தின் ஒழுக்க வரம்புகளுக்குள் அமைய வேண்டும். விமர்சிப்பதற்கும், கேள்வி கேட்பதற்கும், கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் இடமளிக்கும் அதேவேளை, நாகரிகமான சமூகத்தின் பண்புகளையும் பாதுகாக்க வேண்டும்.

சிலர் எம்மிடம், ஒருவர் உங்களை இவ்வாறு திட்டும்போது அதற்கு ஏன் இடமளிக்கின்றீர்கள் என்று கேட்கின்றனர். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். ஆனால், நாகரிகமான சமூகமொன்று ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலான அவதூறுகளையும் அவமதிப்புகளையும் மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.

எனவே, ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் புதிய உறவுமுறையை உருவாக்குவதுடன், நாட்டின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றங்களுக்கான பயணத்தை நாம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளோம்.

1960ஆம் ஆண்டுகளில் எமது அரசியல் இயக்கம் உருவாக்கப்பட்டது முதல் பல்வேறு வரலாற்றுத் திருப்பங்களையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. 1971ஆம் ஆண்டு பாரிய அடக்குமுறையைச் சந்தித்தோம். எமது கட்சியைக் கட்டியெழுப்பிய பலர் கொல்லப்பட்டதுடன், பலர் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்.

1978ஆம் ஆண்டு மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசித்தோம். இடைத்தேர்தல்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டோம். மீண்டும் கட்சி தடைசெய்யப்பட்டு அடக்குமுறைகளை எதிர்கொண்டோம். அந்தக் காலப்பகுதியில் ரோஹண விஜேவீர, கமநாயக்க உள்ளிட்ட எமது கட்சியின் பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். 1994ஆம் ஆண்டு மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசித்து, நீண்ட அரசியல் பயணத்தின் பின்னர் 2024ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினோம்.

தேர்தல்களில் போட்டியிடும்போது ஒரு வகையான சவாலையும், கட்சி தடைசெய்யப்பட்டபோது மற்றொரு வகையான சவாலையும், சிறைச்சாலைகளுக்குள் இருந்துகொண்டு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தபோது வேறொரு சவாலையும் எதிர்கொண்டோம். தற்போது அரசாங்கத்தை நடத்தும்போது முற்றிலும் மாறுபட்ட சவாலை எதிர்கொள்கின்றோம்.

இந்த அனைத்து மாற்றங்களுக்கும் மத்தியிலும் எமது அரசியல் இயக்கத்தை ஒன்றிணைத்த அடிப்படைப் பண்புகள் மாறவில்லை. அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் சிறைவாசத்தையும் எதிர்கொண்டு அவற்றைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல், கூட்டு உணர்வு மற்றும் மக்களுடனான நெருக்கமான உறவு ஆகியவற்றை நாம் கைவிடவில்லை.

எந்தவொரு அரசியல் இயக்கமும் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், அந்த இயக்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் வலுவான உறவு இருக்க வேண்டும். மக்களுக்குச் செவிசாய்த்தல், அவர்களுடன் இணைந்து செயற்படுதல், அவர்களின் வாழ்க்கை முறையையும் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுக்கு நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

அரசியல் மோதல்கள் இடம்பெற்ற காலங்களிலும், சிறைச்சாலைகளில் இருந்த காலங்களிலும், எமது இயக்கம் பலவீனமான நிலையை அடைந்திருந்த காலங்களிலும் மக்களுடனான உறவைப் பேணிவந்தோம். இன்று ஆட்சியதிகாரத்தைப் பெற்றுள்ள நிலையிலும் அந்த உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல தலைமுறையினர் ஒரே இலக்குக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தும், பல்வேறு சவால்களையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்டும் முன்னெடுத்த அரசியல் பயணத்தின் விளைவாகவே இன்று நாம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளோம்.

இந்த அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர் நாம் எதிர்கொள்ளும் புதிய சவால்களையும் பொறுப்புகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றை வெற்றிகொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.