இன்றைய வானிலை



வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று நிலைகொண்டுள்ளது. இது நாளையளவில் இதே இடத்தில் மேலும் தீவிரமடைந்து தாழமுக்கமாக மாறி வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும். இது நாளை மறுதினமளவில் மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் மத்தியில் ஒரு சூறாவளியாக வலுவடைவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையினால் வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பிராந்தியங்களுக்கு மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

மேலும் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது வட திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.