Photos - சுனாமி எச்சரிக்கை காரணமாக பதற்ற நிலையில் மக்கள் - புகைப்படங்கள்

கிருஸ்ணா
சுனாமி எச்சரிக்கை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கரையோரப்பகுதிகளிலும் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகத்துக்கும் உட்பட்ட பகுதி மக்கள் தமது உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர்.

மட்டக்களப்பு,காத்தான்குடி,ஆரையம்பதி,களுவாஞ்சிகுடி,ஏறாவூர்,செங்கலடி,வாழைச்சேனை,வாகரை ஆகிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் படையினர் பொலிஸார் தீவிர கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படை மற்றும் பொலிஸார் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்துவதில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெருமளவு இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நகரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பின் கல்லடி,நாவலடி பிரதேசத்தில் உள்ள மக்கள் இயந்திர படகுகள் மூலம் வேளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் அஜந்த சமரக்கோன் பொலிஸாருக்கு பணிப்புரைகளை வழங்கினார்.

இதேநேரம் மக்கள் இடம்பெயரும் பகுதிகளுக்கு விஜயம்செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் ஆகியோர் நிலைமைகளை பார்வையிட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் தொடர்புகொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

புகைப்படத்தின் மேல் கிளிக் செய்து புகைப்படத்தை பெரிதாக்கி பாருங்கள்