அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி


ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (24) காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர் போருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.

உயிரிழந்த நபர் அருகிலுள்ள வீடொன்றுக்குச் சென்று கதவு, ஜன்னல்களைத் தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்த பெண் இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவிக்கு அறிவித்துள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மனைவி, குறித்த பெண்ணுடன் இணைந்து துடைப்பத்தால் கணவனைத் தாக்கியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்