கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் - VIDEO

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள்  இன்று வியாழக்கிழமை நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


படுகொலை நிகழ்வைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக் கழக நுழைவாயில் முன்றலில் ஒன்று திரண்ட நூற்றுக் கணக்கான மாணவர்கள் கவன ஈர்ப்பு பேரணியில் பங்கெடுத்தனர்.
அங்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

'பெண்களுக்கான சட்டம் எங்கே? பெண்களுக்கான நீதி இதுதானா? சட்டத்தரணிகளே அநீதிக்கு எதிராகக் குரல் கொடுங்கள், உலகமே வித்தியாவிற்காக குரல் கொடு, தமிழா உன் கலாச்சாரத்தை மறவாதே,' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
இவ்வாறான கொடுஞ்செயல்களைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் இப்பொழுதே முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கோசமெழுப்பினர்.