அருகிவரும் பிரம்புக் கைத்தொழில் ! "பிரம்பு வெட்டி வாறத்துக்கு எங்கள விடுறாங்கல்ல தண்டப்பணம் அறவிடுறாங்க."

( செ.துஜியந்தன் )
'பிரம்பு வெட்டி வாறத்துக்கு எங்கள விடுறாங்கல்ல.  ஏதோ சட்டவிரேதமான தொழில் செய்யிறதப்போல பிடிச்சு தண்டப்பணம் அறவிடுறாங்க. இப்ப பிரம்பு வெட்ட புதினமா பேமிட் கேட்காங்க. வெட்டுறத்துக்கு ஒரு பேமிட், கொண்டுவாறத்துக்கு ஒரு பேமிட் எடுக்கோணும்.

எங்களப்போல பிரம்புத்தொழிலில் செய்யிறாக்கள் பற்றி யாராவது சிந்திக்காங்கலா? எனக்கு 12 வயசில இருந்து பிரம்பிளைச்சித்தான் குடும்பத்தக் கரையேற்றிவாறன். 18 வருசமா கொழும்பு பத்தரமுல்லைக்கு பிரம்புச்சாமான் கொடுத்து வாறன். 22 வருசமா தேசிய அருங்கலைகள் பேரவையால நடத்திற தேசிய கைவினை உற்பத்திகளுக்கான தேசிய விருதைப் பெற்றுவாறன்.

பிரம்புக் கைத் தொழில ஊக்குவிக்க அரசாங்கமும் உதவுதில்ல. அரசியல்வாதிகளும் உதவுறாங்கல்ல.' என்றார் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த க. மார்க்கண்டு என்பவர்.

  பாரம்பரிய குடிசைக் கைத் தொழிலான பிரம்புக் கைத் தொழில் இந் நாட்டில் ஊக்குவிக்கப்படாது அது அருகிவரும் நிலைக்குச் சென்றுள்ளது. பிரம்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு இன்று கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்ற நிலையில் இத் தொழிலில் ஈடுபடுபவர்களை தட்டிக்கொடுத்து அதிலுள்ள தடைகளை களைவதற்கு எவரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. மாறாக பிரம்பு வெட்டினால் அதற்கு தண்டப்பணம் அறவிடப்பட்டு வருகின்றதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ளது புதுக்குடியிருப்புக் கிராமம்.

இக் கிராமம் ஒரு காலத்தில் பிரம்புக் கைத் தொழிலிலுக்குப் பேர் போன கிராமமாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பிரம்பினாலான பொருட்களுக்கு நாட்டின் நாலாபாகங்களிலும் நல்ல கிராக்கியுள்ளது. அழகும்,நேர்த்தியும் நிறைந்த பிரம்பு பொருட்களை இங்குள்ள மக்கள் செய்வதில் கெட்டிக்காரர்கள். விஸ்ணு பிரம்புச் சங்கம் என ஒரு சங்கம் வைத்து இச்சங்கம் ஊடாக பிரம்பு கைத்தொழிலாளர்களின் நலன் பேணப்பட்டும் வந்துள்ளது.
இன்று பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதால் இயற்கையான மூலப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும். கை வினைப் பொருளான பிரம்பினால் ஆன உற்பத்திப் பொருட்களை எவரும் எண்ணிப்பார்ப்பதில்லை. 'வெந்ததைத்தின்று விதிவந்தால் சாவோம்' என்ற போக்கிலே பலர் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதனால் அற்ப ஆயுளுடன் தமது வாழ்நாளையும் முடித்துக்கொள்கின்றனர். நாளுக்கு நாள் புதுவித நோய்களின் தாக்கத்தில் உழன்று சாவுக்கும், வாழ்வுக்கும் இடையில் போராடிக்கொண்டிருக்கின்றனர். இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கு விரும்பியோ விரும்பாமலோ நாம் மாறவேண்டும். அதற்கு அரசாங்கமும் உதவவேண்டும்.
குடிசைக் கைத்தொழிலாக விளங்கிய பிரம்புக் கைத்தொழில் இன்று அழிவடையும் நிலைக்குச் சென்றுள்ளது.

'கல், உமி, இல்லாத அரிசி வந்ததால் சுளகுப் பாவனையும் இல்லாம போயிற்றுது. அதுமட்டுமா வெட்டுமெசின் வந்தபிறகு கைப்பெட்டி, மரைக்கால், பிரம்புக்கூடை எல்லாம் இல்லாமப்போச்சி இருந்தாலும் இப்பவும் பிரம்பால செய்யிற சாமான்களத் தேடி வாங்கிற்றுப் போறாக்களும் இருக்காங்க. நம்மட நாட்டுக்குவாற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பிவாங்குறாங்க. எங்களுக்கு ஊக்குவிப்பு தாறத்துக்குத்தான் ஒருவருமில்ல.' என்றார் சுவேந்திரன் என்பவர்.

பிரம்பு உற்பத்திப் பொருட்கள் இயற்கையானது, நச்சுத்தன்மையில்லாதது, மழை, வெயில் எதுவென்றாலும் பழுதடையாது, கீழே விழுந்தாலும் உடையக்கூடியதல்ல, பத்து, பதினைந்து வருடங்கள் நீண்ட காலத்திற்கு பாவிக்கக் கூடியது. விலையும் குறைவானது. அது மட்டுமல்ல பிரம்பு பெட்டி, சுளகு, மரைக்கால் என்பன வீட்டில் இருந்தால் அதில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்ற மத நம்பிக்கையும் இருந்தது. இவையெல்லாம் இப்போது அருகிவருவது வேதனையளிக்கின்றது. பிரம்பு கிழங்கும் அதன் வேரும் மருத்துவத்திற்கு பயன்படுகின்றது. பிரம்பு பழத்தில் விற்றமின் 'சீ' சத்தும் உள்ளது. இப்படிப்பட்ட பிரம்புக் கைத்தொழிலை வளர்த்தெடுக்க அரசு பாராமுகமாக இருப்பது ஏன்?

பிரம்புக் காட்டினை அரசு காடழிப்பு திட்டத்தில் உள்ளடக்கியுள்ளது. இதனாலே பிரம்பினை வெட்டமுடியாத துர்ப்பாக்கிய நிiயில் உற்பத்தியாளர்களுள்ளனர். பிரம்புக் காடு என்பது வெட்ட வெட்டவே அதன் வளர்ச்சி வேகமாக வளரும். முன்னர் இருந்த பிரம்புக் காடுகள் வீட்டுத்திட்டம், விவசாயப்பண்ணைகள் அமைப்பதற்க்காக திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரம்பு பன்னை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொடுவாமடு, மாவடிவேம்பு, உறுகாமம், கரடியனாறு போன்ற பகுதிகளில் இருந்தே பிரம்பு உற்பத்திக்கான மூலப்பொருளைப் பெற்று வருகின்றனர். தற்போது இங்கிருந்தும் பிரம்பினை பெறமுடியாதுள்ளனர். பிரதேச செயலகங்கள் அனுமதிப்பத்திரங்களை கொடுப்பதில் பின்னடிக்கின்றன.

அரசினால் பன், பனை, தும்பு, களிமண் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரம்பினை மட்டும் அதற்குள் உள்ளடக்கவில்லை. இதனாலே அதனைப் பெறமுடியவில்லை.
பிரம்பினால் ஆன உற்பத்திப் பொருட்களை செய்பவர்கள் மனதில் சந்தோசம் நிறைந்தவர்களாக காணப்படுகின்றனர். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் பிரம்பு தொழிலில் ஈடுபடுபவர்களுக்குவராது என்றும் இதற்கு காரணம் பிரம்பு உற்பத்தியின் போது அவர்கள் இருக்கும் ஆசன முறைகள் மாறுபட்டதாகும். கோபம், இரத்த அழுத்தம் போன்றவற்றைக் குறைத்து உள்ளத்தில் அமைதியையும், சுறு சுறுப்பையும் ஏற்படுத்துவதாகவும் பத்து விரல்களுக்கும் பயிற்சி வழங்குவதால் இரத்தவோட்டம் சீராக