கடந்த மாதம் 30ம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் குறித்த சிறுவனின் தாயாரின் ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (20) மாலை மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன் போது குறித்த தாயார் தன்னுடைய விபத்தில் உயிரிழந்த மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் தனக்கு இந்த இழப்புக்கான பண இழப்பீடுகள் வேண்டாம் எனவும் சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தினார்.
பொலிஸார் இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் இந்த விபத்தை ஏற்படுத்திய நபரும் குறித்த வாகனமும் இன்று வெளியில் இருப்பதாகவும் பொலிஸார் தங்களது வாக்குமூலத்தையும் பதிவு சரியான முறையில் செய்யவில்லை எனவும் நீதியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் பக்க சார்பாக செயற்பட்டதாகவும் குறித்த தாயார் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற சிசிடிவி காணொளிகள் இதன் போது வெளியிடப்பட்டதுடன் பொலிஸார் இந்த சிசிரிவி காணொளிகளை கூட பார்வையிட்டு சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் இதன் போது குற்றம் சுமத்தினார்.
குறித்த விபத்தான தாயின் கவனக்குறைவினால் இடம்பெற்றதாகவும் தாங்கள் சரியான முறையில் வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் கூறி குறித்த விபத்துக்கு காரணம் உயிரிழந்த சிறுவனின் தாயார் தான் என சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது பிள்ளையின் உயிருக்கு பேருந்து உரிமையாளர் 50 ஆயிரம் ரூபாயும் பேருந்து சாரதி ஒரு லட்சம் ரூபாயும் தங்களுக்கு இழப்பீடாக வழங்கியதாகவும் அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் தனக்கு சரியான நீதி வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தார்.
தனது மகன் பேருந்தின் பின்பக்கம் அடிபட்டு விபத்துக்குள்ளானதாகவும் ஆனால் விசாரணையின் போது பேருந்து முன் பக்கம் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்ததாகவும் இறந்த சிறுவனின் உடல் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே சாரதியை பிணையில் விடுவித்ததாகவும் பேரூந்தையும் விடுவித்ததாகவும் குறித்த தாயார் இதன் போது தெரிவித்தார்.
பொலிஸார் உயிரிழந்த சிறுவனின் தாயாரின் வாக்குமூலத்தை கூட சரியான முறையில் பெறவில்லை எனவும் நீதியான விசாரணையை முன்னெடுக்கவில்லை எனவும் சிசிரிவி காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் இதன் போது குற்றச்சாட்டினர்.
உயிரிழந்த சிறுவனுக்கு சிறந்த விசாரணையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டி தர வேண்டுமென இதன் போது கண்ணீர் மல்க ஊடகங்களிடம் வேண்டிக்கொண்டார்.