ஆரையம்பதி பகுதியில் தமிழ் மக்களை காணியில் இருந்து வெளியேறச் செய்தமையால் பதற்றம்

மட்டக்களப்பு ஆரையம்பதி கோவில்குளம் பகுதியில் (4ம் கட்டை) குடியிருந்த தமிழ் மக்களை காணிகளிலிருந்து வெளியேறுமாறு காத்தான்குடி மீரா பள்ளிவாசல் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்தமையினால் அப்பகுதியில் இன்று மதியம் (14-11-2017) பதற்ற நிலை ஏற்பட்டது. காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் நடுவே அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

இதனைத்தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் வீதியில் அமர்ந்து எதிர்ப்பை வெளிக்காட்டிய மக்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், தாங்கள் அப்பதியில் 60 வருடங்களுக்கு மேலாக வசித்து வருவதாகவும், அண்மையில் இக்காணிகள் காத்தான்குடி மீரா பள்ளிவாசல் சம்மேளனத்திற்கு சொந்தமானது எனக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் தாங்கள் சுண்ணாம்பு நீற்றுக் குடிசைத்தொழில் மேற்கொண்டு வருவதாகவும், காணிகளிலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டமையானது தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் எனவும், இப்பிரச்சனையால் இங்கு வசித்து வரும் 24 குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள்  கூறுகையில் இது அரசியல் ரீதியான முன்னெடுப்பு எனவும், ஆரையம்பதி பிரதேச சபையில் முஸ்லிம் மக்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டினர். முக்கியமாக தமிழ் அரசியல்வாதிகள் இந் நிலைகளை கண்டுகொள்ளாமையானது வேதனை தருவதாகவும் பதவியினை மட்டும் வைத்துக் கொண்டு பாராமுகமாக இருப்பதாகவும் கூறினர்.