கிரான்குளத்தில் விபத்து! மோட்டார் சைக்கிளுடன் பேருந்தால் மோதிவிட்டு சாரதி தப்பிக்க முயற்சி!


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் குளத்தில் தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (22) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மட்டக்களப்பு திராய்மடு பகுதியை சேர்ந்தவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி சென்ற தனியார் பேருந்தே குறித்த விபத்திற்கு காரணம் எனவும் இதன் போது மோட்டார் சைக்கிளை இடித்த பேருந்து நீண்ட தூரம் சைக்கிளை இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

விபத்தினை தொடர்ந்து பேருந்து சாரதி வேறு ஒரு பேருந்தில் ஏறி தப்பிச்செல்ல முயன்ற போது பொதுமக்கள் பேருந்து சாரதியை பிடித்து தாக்கியமை காரணமாக அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்குவந்த காத்தான்குடி பொலிஸார் குறித்த சாரதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.