தேசமாய் ஒன்றிணைந்து சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் - வாழைச்சேனையில் பேரணி


(எம்.ரீ.எம்.பாரிஸ்)
சர்வதேச சிறுவர் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு 'வாருங்கள் தேசமாய் ஒன்றிணைந்து சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு முற்று புள்ளி வைப்போம்' எனும் நிகழ்ச்சித்திட்டம் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் தெரிவு செய்யப்பட்ட 12 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக 'சிறுவர் பாதுகாப்பும் பங்களிப்பும்' எனும் தொனிப்பொருளில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிராகவும், அதனைத்தடுப்பதற்கான அமைதிப் பேரணியும், கையொப்ப அடையாளத்திட்டளும், அதன் விழிப்பூட்டும் நாடகமும் இடம்பெற்றது.

வேல்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் இடம்பெற்று வரும் இச்சிறுவர் நல வேலைத்திட்டம் பிரதேசத்தின் சிவில் சமூகக்குழுக்களினதும், வாழைச்சேனை பொலீஸ் நிலையத்தின் பங்களிப்புடனும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் வீ.நிரூபா, வேல்ட் விஷன் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய வலய முகாமையாளர் ஜே.ஏ.றமேஸ்குமார், திட்ட முகாமையாளர் எட்வின் ரணில் உள்ளிட்ட வாழைச்சேனை பொலீஸ் நிலைய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.