யானை மற்றும் குரங்குகளிடம் இருந்து பாதுகாப்பு கோரி போராட்டம்


வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை, கிண்ணையடி, சுங்காங்காங்கேணி ஆகிய பிரதேசங்களில் குரங்குகள் மற்றும் யானைகள் தொல்லை அதிகமாக காணப்படுவதாகவும், அவற்றினை குறித்த பிரதேசங்களில் இருந்து அகற்றி தருமாறு கோரி பிரதேசத்தின் பொதுமக்கள் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூகபற்றாளர் முனிதாஸ் சிறிகாந் என்பவரின் தலைமையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை ஆகிய அரச திணைக்களங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது குரங்கு தொல்லையில் இருந்து வீடு உடமைகள் பயிர் செய்கை தோட்டம் என்பனவற்றினை காப்பாற்றி தாருங்கள், வேண்டும் வேண்டும் தீர்வு வேண்டும், குரங்கு பிரச்சனைக்கு நல்ல முடிவு வேண்டும், இறுதியாக எமக்கு தங்களிடமிருந்து இறுதியான தீர்வு தேவை, குரங்கு மற்றும் யானைகளிடம் இருந்து எங்கள் தோட்டங்களை காப்பாற்றுங்கள், யானைகளிடம் இருந்து எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கலந்து கொண்டனர்.

முதலில் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் அங்கிருந்து வாழைச்சேனை பிரதேச சபையை நோக்கி சென்று பிரதேச சபைக்கு முன்பாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் அ.தினேஸ்குமாரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்த போது மகஜரை பெற்றுக் கொண்ட செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்! அடிக்கடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர்களினால் முன்வைக்கப்பட்ட விடயமாகும். இதற்கான தீர்வு அபிவிருத்தி குழு கூட்டத்தில் எட்டப்படட்டதாகும். இருந்த போதிலும் இது விடயமாக பிரதேசத்தின் வனஜீவராசிகள் திணைக்களத்தில் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் வி.வாசுதேவனிடம் மகஜர் கையளிக்கபட்ட போது குறித்த விடயம் சம்பந்தப்பட்ட திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே குறித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.