மாமாங்கத்தில் பல்கலை மாணவர்களின் பாரம்பரிய அரங்க விழா


கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் நடாத்தப்படும் பாரம்பரிய அரங்க விழாவின் தொடக்க நிகழ்வு சமுதாய ஒன்று கூடலுடன் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது

நுண்கலைத்துறையினரால் எட்டாவது வருடமாக சமுதாய நலன் கருதி முன்னெடுத்து வரும் 'பாரம்பரிய அரங்க ஆற்றுகையும், கண்காட்சியும்' எனும் நிகழ்வு 05.08.2018 அன்று காலை 10.00 மணிக்கு கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் திரு சு.சந்திரகுமாரின் தலைமையில் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் அமைக்கப்பட்ட களரி வெளியில் நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாகக் கிழக்குப்பல்கலைக்கழக பதில் உபவேந்தர் வைத்தியக் கலாநிதி கே.இ.கருணாகரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கலை கலாசாரப் பீட பீடாதிபதி திரு மு.ரவி அவர்களும், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும், மாமாங்கேஸ்வர ஆலய வண்ணக்குமார்களான திரு தி.விக்கிரமன், திரு க.புவனச்சந்திரா, திரு கோ.ரிசிநேசன், திரு உ.சுரேந்திரகுமார், முன்னாள் வண்ணக்கர் திரு ம.அரசரெட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வருடம் தொடக்க நிகழ்வுக்காக பாரம்பரியக் கூத்தரங்கின் அண்ணாவிமார்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் மங்கல வாத்திய தாள இசையுடன் நிகழ்வு ஆரம்பமானது. அனைத்து அண்ணாவிமார்களும் தமது நிபுணத்துவத்திற்கேற்ப மத்தளத்தில் தாளத்தை வாசித்து அனைவரையும் தம் வசம்; ஈர்த்தனர். அதன் பின்னர் நுண்கலைத்துறை மாணவர்களின் 'வசந்தன் கூத்து' அதற்கான தாள லயத்துடன் ஆற்றுகை செய்யப்பட்டது. இதன் பின்னர் கலைப்பீட மாணவன் சர்வேஸ்வரனால் உடுக்கு இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வு பற்றிய கருத்துக்களைப் பின்வருமாறு அதிதிகள் ஆற்றினர். நுண்கலைத்துறையின் தலைவர் திரு சு.சந்திரகுமார் தனது தலைமையுரையில் 'இவ்விழாவானது மாணவர்மைய, சமுதாயமையக் கற்றல் - கற்பித்தலை வலுப்படுத்தும் நோக்குடனும், கோட்பாடாகக் கற்றவற்றை செயல் மையப்படுத்துவதற்கும், மாணவர்கள் மத்தியில் வினைத்திறனுடைய சுய ஆளுமைகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடனும், இலங்கையின் கல்வித்தர நிர்ணயத்தினை அமுல்படுத்தும் நோக்குடனும், பாரம்பரிய சமுதாய அரங்க மற்றும் கலை நுட்பங்களையும், கலைஞர்களையும் ஒன்றிணைத்து அவர்களது ஆற்றல் திறனை வெளிப்படுத்தும் நோக்குடனும், இதனூடாக மாணவர் மையக் கற்பித்தலை வலுப்படுத்தும் நோக்குடனும் முன்னெடுக்கப்படுகின்றது' எனக் குறிப்பிட்டார்.

பிரதம அதிதி உரை நிகழ்த்திய பிரதி உபவேந்தர் வைத்தியக் கலாநிதி கே.இ. கருணாகரன் அவர்கள் 'பல்கலைக்கழகம் கற்றல் கற்பித்தல், ஆராய்ச்சி என்னபவற்றினைச் செய்வதோடு, இவ்வாறான சமூகச் செயற்பாட்டடையும் செய்யவேண்டும். இதனைக் கிழக்குப்பல்கலைக்கழகம் அதன் பீடங்களினூடாக முன்னெடுக்கின்றது. இதனை முன்னெடுக்கும் நுண்கலைத்துறையினருக்கு எனது வாழ்த்துக்கள். மாணவர்கள் தொழிலைக் கொடுப்பவர்களாக வலுவாக்கம் பெற வேண்டும் எனவும்' எனக் குறிப்பிட்டார். சிறப்பு அதிதி உரை நிகழ்த்திய பீடாதிபதி திரு மு.ரவி அவர்கள் 'கலைப்பீடம் சமூகம் சார் நிகழ்வுகள் பலவற்றை நடாத்தி வருகின்றது. மாணவர்கள் வினைத்திறனுடன் கற்பதற்கு இந்நிகழ்வு வழிவகுக்கின்றது. இதனைச் செயற்படுத்தும் நுண்கலைத்துறையினருக்கு வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிட்டார். வண்ணக்கர் திரு தி.விக்கிரமன் அவர்கள் 'இந்த நிகழ்வைச் செய்வதற்கு நுண்கலைத்துறையின் தலைவர் திரு சு.சந்திரகுமார் அவர்கள் வந்து அனுமதி கேட்டபோது திருவிழாவின் ஒவ்வொரு நாளும் இக்கலை நிகழ்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் என்றும், கலையுடனே தமிழும் சைவமும் ஒன்றாக வளர்ந்தது. இக்கோயில் முன்றலில் இவ்விழா நடைபெறுவது வரவேற்கத்தக்கது. கலைகளை இதனூடாக வளர்க்க வேண்டும். அனைவரும் பயன் அடைகின்றோம்.' எனக் குறிப்பிட்டார். சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி. சி.ஜெயசங்கர் அவர்கள் 'பாரம்பரியக் கூத்துக் கலைஞர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள், அவர்கள் கூத்து வெளியில் புலமையாளர்கள், அவர்கள் பொருத்தமில்லாது எமது அறிஞர்களால் எழுத்துக்களில் கட்டமைக்கப்பட்டுள்ளனர். இது அபத்தமானது. இக் கலை நிகழ்வு 2011 இல் தொடங்கியது. இவ்வருடம் நுண்கலைத்துறையின் தலைவரும் ஏனைய விரிவுரையாளர்களும் இதனை முன்னெடுப்பது மகிழ்ச்சியளிக்கின்றது' என்றார்.

அத்தோடு 'வாழும் போது வாழ்த்துவோம்' எனும் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் பாரம்பரியக் கூத்தரங்கில் செயற்படும் மாற்றுத்திறனாளிகளான குருந்தையடி முன்மாரியைச் சேர்ந்த கு.டிலானி, மங்கிகட்டைச் சேர்ந்த த.சாந்தகுமார் அவர்களும் மட்டக்களப்பு கிறிஸ்த்தவக் கூத்தை முன்னடுக்கும் தன்னாமுனையைச் சேர்ந்த அண்ணாவியார் சீ.அலெக்சாண்டர் அவர்களும் பூமாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டதோடு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் டிலானியினால் வடிவாக்கம் செய்யப்பட்ட கரகமும் ஆற்றுகை செய்யப்பட்டது. சாந்தகுமார் தான் உருவாக்கிய காப்புப் பாடலை இனிமையாகப் பாடியதோடு புல்லாங்குழல் வாத்தியமும் இசைத்தார்;. இதன் பின்னர் காட்சிக் கூடம் கி.ப.க பதில் உபவேந்தர் வைத்தியக் கலாநிதி கே.இ.கருணாகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கன்னங்குடாவில் குருக்கேத்திரன் கூத்தில் குருக்கேத்திரனுக்கு ஆடிய கூத்தருக்கு மாலை அணிவித்து பாராட்டப்பட்டது.

இவ்விழாவின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி மற்றும் அழைப்பிதலை வடிவமைக்கப் பொறுப்பாக இருந்த நுண்கலைத்துறையின் விரிவுரையாளர் கு.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்ச்சிகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். காட்சிக் கூட வடிவமைப்பு மாணவர்களூடாக நுண்கலைத்துறையின் விரிவுரையாளர் திருமதி துஷ;யந்;தி சத்தியஜித் அவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. களரி தோரண வடிவமைப்பு துறைத்தலைவர் திரு சு.சந்திரகுமார் அவர்களின் வழிப்படுத்தலில் மாணவர்களுடன் இணைந்து கட்டப்பட்டது. அத்தோடு, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறை உதவி விரிவுரையாளர் குகநாதன், சசிதரன், கூத்துக் கலைஞர் புவிக்குமார் ஆகியோர் பெரும் துணை புரிந்தனர்.

இவ்வருட விழாவின் 'நிகழ்த்துகைக் களரிகள்' மூத்த கூத்துக் கலைஞர்களை மையப்படுத்தி வைக்கப்பட்டது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 150க்கு மேற்;பட்ட வடமோடி தென்மோடிக் கூத்துக்களைப் பழக்கிய 'மானாகப்போடி அண்ணாவியார் களரி' எனவும், இரண்டாம் நாள் கரவெட்டியைச் சேர்ந்த விலாசம், வடமோடி, தென்மோடி எனப் பல கூத்துக்களைப் பழக்கிய 'ஐ.அரசரெட்ணம் அண்ணாவியார் களரி' எனவும், மூன்றாம் நாள் மட்டக்களப்பில் கிறிஸ்தவக் கூத்துப் பரம்பரையை உருவாக்கிய 'ய.சீனித்தம்பி களரி' எனவும் வைக்கப்பட்டது.

இன்றைய நவீன உலகில் அதிதொழிநுட்பம் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது. இவ்வாறான பாரம்பரிய அரங்க விழாக்கள் கலைகளை உயிர்த்துவமாக வைத்திருப்பதற்கு பெரும் துணை வகிக்கின்றது. இத்தொடக்க நிகழ்வில் ஊர்மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வெளிநாட்டவர்கள், பாரம்பரியக் கூத்தர்கள், அண்ணாவிமார், கலாசார உத்தியோகத்தர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் எனப் பலரும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.