தேசிய ரீதியான கராத்தே சுற்றுப்போட்டியில் ராம் கராத்தே சங்க மாணவர்கள் சாதனை


கல்வி அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான தேசிய ரீதியான கராத்தே சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய 2 மாணவர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கண்டி மாநகர சபையின் திகன உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 8, 9 ஆந் திகதிகளில் நடாத்தப்பட்ட 16, 18, 20 வயதுக்குட்பட்டோருக்கான காட்டா, குமித்தே போட்டிகளில் அகில இலங்கை பாடசாலைகள் ரீதியாக சுமார் 250 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட குறித்த போட்டித்தொடரின் 20 வயதுக்குட்பட்டோருக்கான காட்டா பிரிவில் கலந்துகொண்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் மாணவன் பி.சரோன் சச்சின் மற்றும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் எஸ்.ஏ.சராஜ் மொகமட் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்று ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பதவிநிலை உதவியாளரும், ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.ஹேந்திரமூர்த்தியின் மாணவர்களான இவர்கள் அவரது மேற்பார்வையின் கீழ் கென்சி கே.ராஜேந்திர பிரசாத் மற்றும் கென்சி கே.சாரங்கன் ஆகியோரால் விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்டு தமது பிரிவில் போட்டியிட்ட 36 போட்டியாளர்களைத் தோற்கடித்து இச்சாதனையைப் புரிந்ததுடன், இலங்கை கராத்தே சம்மேளன நடுவர் சங்க இணைப்பாளர் சிகான் மடோன்சாவினால் பதங்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

இவரது மாணவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்த பாடசாலைகளுக்கிடையிலான தேசிய ரீதியான கராத்தே சுற்றுப்போட்டிகளில் காட்டா பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய ரீதியான கராத்தே சுற்றுப்போட்டிகளில் காட்டா பிரிவில் வெண்கலமும், குமித்தே பிரிவில் வெள்ளிப் பதக்கம் ஒன்றையும் வென்றிருந்தபோதிலும் திருக்கோவில் வலயம் சார்ந்த கல்விச் சமூகத்தினால் எவ்வித கரிசனையும் கொள்ளப்படாதிருந்த நிலையில் இவ்வருடமும் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதித்திருப்பது சகலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவ்வருடம் அடங்கலாக கடந்த இரு வருடங்களையும் நோக்கும்போது அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் மாணவர்கள் இவ்வாறு தேசிய மட்டப் போட்டிகளில் மட்டுமல்லாது சர்வதேசப் போட்டிகளிலும் தொடர்ச்சியான சாதனைகளைப் படைத்துவருவது அக்கரைப்பற்றில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி, முழு கிழக்கிலங்கை மக்களுக்கும் பெருமையைத் தருவதாக உள்ளது என்றால் மிகையாகாது.