
ஈரான் கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி, புதன்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்து, ஈரான் கடற்படை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக எதிரிகள் கொடிய பழிவாங்கலை சந்திக்க வேண்டி வரும் என தெரிவித்தார்.
“எதிரியின் குற்றத்தை நாம் மறக்கமாட்டோம். எங்கள் வீரச்சாவடைந்தவர்களின் இரத்தத்திற்காக நாம் பழிவாங்குவோம்,” என டீனா (Dena) கப்பலில் உயிரிழந்தவர்களை குறிப்பிட்டு அவர் கூறினார்.
“எதிரி எங்கு எதிர்பார்க்காத இடத்திலிருந்து நாம் கொடிய தாக்குதல்களால் தண்டிப்போம் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மார்ச் 4ஆம் தேதி, இந்தியாவில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படை பயிற்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்த இரான் கடற்படையின் ‘டீனா’ (Dena) போர்க்கப்பல், இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட MK-48 டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த தாக்குதலில் மொத்தம் 104 பணியாளர்கள் உயிரிழந்ததாகவும், 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், 32 கடற்படையினர் காப்பாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
IRIS டீனா கப்பல், இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் கூட்டு பயிற்சியில் கலந்து கொண்ட பின்னர், சர்வதேச நீர்ப்பரப்பில் அமெரிக்க கடற்படையால் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை அமெரிக்க போர் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியதுடன், இது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு டார்பிடோ மூலம் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட முதல் சம்பவம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்தால் நாடு துக்கத்தில் இருந்தாலும், வீரச்சாவடைந்தவர்களின் இரத்தத்திற்கு பழிவாங்கும் இராணுவ உறுதி தொடரும் என ரியர் அட்மிரல் இரானி வலியுறுத்தினார்.
“இன்று நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை நினைத்து துக்கப்படுகிறோம். ஆனால் கடவுளின் அருளால் எதிரியை முழங்காலில் வீழ்த்தியுள்ளோம்,” என அவர் கூறினார்.
இரான் எச்சரிக்கையின்படி, எதிர்பாராத இடங்களில் கூட எதிரிகளின் சொத்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
டீனா கப்பலில் உயிரிழந்தோருக்கான இறுதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் என்றும், மறுநாள் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணி இரானுக்கு எதிராக தூண்டுதல் இல்லாத தாக்குதலை தொடங்கியதாகவும், அதில் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லா சையத் அலி கமேனெய் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பதிலாக, இரான் ஆயுதப்படைகள் இதுவரை “ட்ரூ புராமிஸ்” நடவடிக்கையின் கீழ் 56 கட்ட தாக்குதல்களை மேற்கொண்டு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










.webp)

