பட்டிருப்பு கல்வி வலயத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள்.


(சித்தா) பட்டிருப்பு கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள் இன்று (13.09.2018) பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் தலைமையில் மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.  
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார். கட்டாயம் நாம் கல்வி கற்றவேண்டும். நாம் நமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்கு கல்விதான் மிக அடிப்படையானது. இந்தக் கல்வியை நாம் கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது. உலகில் பெரும் தலைவர்களெல்லாம் பெரும் ஏழ்மை நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள். இந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் இலிங்கன், மிகப் பெரிய விஞ்ஞானி அப்துல் கலாம், தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஆகிய பெரியோர்களை நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளமுடியும். எனவே மாணவர்களாகிய நாங்கள் கற்றலுக்கான தடைகளை நீக்கி சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்;.
இந் நிகழ்வின் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் போது பொது மக்களுக்கு எழுத்தறிவு தினக் கையேடும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வினை பட்டிருப்பு வலய முறைசாராக் கல்விப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.செ.நடராசதுறை ஒழுங்கமைத்திருந்தார். இவர்களுடன் முறைசாரக் கல்வி திட்டமிடல் உதவியாளர்களும் இணைந்து கொண்டனர்.