நல்லிணக்கத்தினை வலியுறுத்தி மாற்றுத் திறனாளி முகம்மட் அலியின் சாதனை

இன நல்லிணக்கத்தினை வலியுறுத்தியும் மாற்றுத் திறனாளிகளுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும்  ​கோரி நாட்டைச் சுற்றி 1400கிலோ மீற்றர் தூரத்தினை சாதனைப் பயணமாகக் கொண்டு வலம் வரும் மாற்றுத் திறனாளி முகம்மட் அலி நேற்றுமுன்தினம் (09)  கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று நகரினை வந்தடைந்தார்.

இலங்கையின் 71வது சுதந்திர தினத்தினையொட்டி நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தவர்கள் மத்தியிலும் இன நல்லிணக்கத்தினை வலியுறுத்துவதோடு, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் வவுனியாவைச் சேர்ந்த மக்கீன் முகம்மட் அலி என்னும் மாற்றுத் திறனாளி மாற்று வலுவுடையோர் வண்டியில் இலங்கை முழுவதும் தனது சாதனைப் பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி தனது பயணத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்த இவர் கொழும்பு, புத்தளம், நீர்கொழும்பு, காலி, வெல்லவாய, திருக்கோவில், தம்பிலுவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்கள் ஊடாகப் பயணித்து அக்கரைப்பற்று நகரினை வந்தடைந்தார்.

கொட்டும் மழையினைக் கூட பொருட்படுத்தாமல் அக்கரைப்பற்று நகரை வந்தடைந்த இவர், தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், நாட்டில் நிலையான நல்லிணக்க சமாதானம் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி  இப் பயணத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தினை வந்தடைந்த இவருக்கு இளைஞர் கழக உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலர் திரண்டு மலர் மாலை அணிவித்து ஆரத் தழுவி பாரிய வரவேற்பினை வழங்கினார்கள்.
அக்கரைப்பற்றைத் தொடர்ந்து பாலமுனை, சாய்ந்தமருது, கல்முனை என அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது
இலங்கை மின்சார சபையில் சேவையாற்றும்போது மின்கம்பத்திலிருந்து வீழ்ந்து முள்ளந்தண்டுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக இவர் தனது நடக்கும் சக்தியினை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.