புகைப்படம் வைத்திருந்தவர்கள் கைது ஆனால் சேர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் மீது எவ்வித விசாரணைகளும் இல்லை

 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை. இந்த நாட்டில் சட்டம் ஒன்றாக இல்லை ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றாக இருக்கின்றது என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் குற்றம் சாட்டப்படுகின்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி எந்தளவு கவனம் செலுத்துகின்றார் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

 இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

 ஏறாவூர் பொலிஸ் பிரிவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் றமழான் மொகமட் இர்பான் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 27 அரச முத்திரைகளில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளர் தற்போதைய பிரதேச செயலாளரின் அரச முத்திரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக கிராம சேவகர்கள், வன இலாகா அதிகாரிகள், நில அளவையாளர் மட்டுமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தையும் தாண்டி பதியத்தாலாவ பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்களின் முத்திரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 இவ்வாறு இந்த மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வன இலாகா அதிகாரிகள் என ஒரு பிரதேச செயலகத்திற்கு உரிய அதிகாரிகள் அனைவரினதும் முத்திரைகள் அச்சடிக்கப்பட்டு ஒரு பிரதேச செயலகம் பொன்று ஏறாவூர் பிரதேசத்தில் ஒரு இடத்தில் இத்தனை காலமும் இயங்கிக் கொண்டிருந்திருக்கின்றது.

 கைப்பற்றப்பட்ட முத்திரைகளின் உத்தியோகத்தர்கள் அனைவரும் தமிழ் சிங்கள உத்தியோகத்தர்களாகவே இருக்கின்றார்கள். இங்கு முத்திரைகள் மாத்திரம் அல்ல வன இலாகாவிற்கு உரிதான மரங்களுக்கு முத்திரையிடப்படும் சுத்தியல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 கடந்த காலங்களில் 2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து வளம் நிறைந்த பகுதியான படுவான்கரைப் பகுதியில் உள்ள மரம், மண், நிலம் அனைத்தும் வேகமாக அபகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இதனை நாங்கள் பல தடவைகள் தெரிவித்தும் வந்தோம். இவற்றைப் பேசுகையில் நாங்கள் இனவாதியாக முத்திரை குத்தப்பட்டோம். எங்களுக்ககுள் இருக்கும் சில நல்லிணக்கம் பேசுகின்றவர்களாலும் நாங்கள் இனவாதியாக முத்திரை குத்தப்படுகின்றோம். ஆனால் அவர்கள் சகல அரச முத்திரைகளையும் வைத்து நமக்கு நன்றாகக் குத்தியிருக்கின்றார்கள்.

இவ்வாறு எமது எல்லைப்புறப் பிரதேச காணிகளுக்கான சகல ஆவனங்களையும் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் கொடுக்கப்பட்ட சுவர்ண பூமி காணி ஒப்பம் வாகரைப் பிரதேச எமது மக்கள் வைத்திருக்கின்றார்கள். அவர்கள் இன்று வெளியேற்றப்பட்டு சகல ஆவனங்களுடனும் அரசியல் பின்புலத்துடனும் வேறு நபர்கள் இருக்கின்றார்கள். எந்த அளவிற்கு எமது நிலங்கள் வளங்கள் சட்டரீதியான முறை எனக் காட்டப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.

 இவற்றைப் பேசுபவர்கள் இனவாதிகள், இதனை வெளிப்படுத்தும் ஊடகங்கள் இனவாத ஊடகங்கள் என இனவாதத்தைப் பரப்பும், இனவாதத்தைக் கக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் அருவருடிகளும் கூறுகின்றார்கள். அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது ஒருபோதும் குற்றம் சுமத்தவில்லை.

 83 களுக்கு முன்னர் அரச ஊடகங்களில் அதிகளவான தமிழர்கள் இருந்தார்கள் ஆனால் கடந்தகால யுத்தம் மற்றும் அதன் பிறகு தமிழ் ஊடகவியலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு அரச ஊடகத்துறையில் மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்தி தற்போது நிறைந்துள்ளார்கள். கடந்த காலங்களில் 35 வீதத்திற்கு அதிகமாக இருந்த தமிழ் ஊடகவியலாளர்கள் தற்போது 7 வீதமும் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அரச ஊடகங்களில் தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கின்ற திறமையான ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

 கடந்த யுத்த காலத்தில் ஊடகங்கள் நடந்த விடயங்களை அவ்வாறே தெரிவித்தது. அப்போதெல்லாம் நல்ல ஊடகங்களாகத் தெரிந்தவை தற்போது இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் மதத்தின் மீது கொண்ட அதிதீவிரப் போக்கின் காரணமாக சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து நடாத்திய காடைத்தனமான மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் நியாயமான விடயங்களைச் சொல்லுகின்ற போது அவை இனவாத ஊடகங்களாகவும் நாட்டைக் குழப்புகின்ற ஊடகங்களாகவும் தெரிகின்றது.

 தற்போதைய நிலையில் பல்வேறுபட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது. அவ்வாறான பொருட்களுக்கு சில முஸ்லீம் அமைச்சர்கள் சொல்லும் வியாக்கியானம் மிகவும் நகைச்சுவையாக இருக்கின்றது. அண்மையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் பற்றி அவர் கூறிய விடயம் நகைப்புக்குரியதே. முன்னாள் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் விட்டுச் செல்வதற்கு துப்பாக்கி ரவைகள் என்ன பிய்ந்த செருப்பா அல்லது தலை சீவும் சீப்பா எனக் கேட்கத் தோணுகின்றது.

 காத்தான்குடியில் பலம்பெரும் அரசியல்வாதிகளை அழைத்து தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுகின்ற அளவிற்கு சஹ்ரான் செயற்பட்டிருக்கின்றார் என்பது வியப்பான விடயமே. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அது சேர்ந்து எடுத்துக் கொண்ட படமும் அல்ல அவர்கள் அறையில் இருந்தது. ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை. கைது செய்யப்படுபவர்களும் விரைவாக வெளியில் வந்து விடுகின்றார்கள்.

 அரசியல் அதிகாரம் பதவி ஆளுங்கட்சியின் ஆதரவு என்பவற்றை வைத்துக் கொண்டு அனைத்தும் இடம்பெறுகின்றது. இவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு ஒரு நியாயமான நீதியான விசாரணை மேற்கொள்ள முடியும். பதவி அதிகாரம் கொடுத்து அரசின் பக்கபலமாக வைத்துக் கொண்டு எவ்வாறு குற்றவாளிகளை இனங்காண முடியும்.

 ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜனாதிபதி கூட பாதுகாப்பு விடயத்தில் இன்று குற்றம் சாட்டப்படுகின்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தளவு கவனம் செலுத்துகின்றார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

 இந்த நாட்டில் சட்டம் ஒன்றாக இல்லை ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றாக இருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் பொதுச் சட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். பொதுக் கல்வி முறை கொண்டு வரப்பட வேண்டும். பாடசாலை சீருடைகளில் ஒரு சமத்துவம் இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிச் சட்டம் தனிக் கல்விமுறை என்று சென்றதன் காரணத்தினால் அதிதீவிரப் போக்கு பயங்கரவாதமாக மாறி அப்பாவி மக்களின் உயிர்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளது.

 அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகள் சிலரைத் தங்களுக்குச் சார்பான கருத்துக்களைக் கூறுவதற்குப் பயன்படுத்துகின்றது. ஏனெனில் அரசாங்கத்திற்குச் சார்பாக வக்காலத்து வாங்கக் கூடிய தமிழ் அரசியல்வாதிகளை இப்போது பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஒரு சிலர் முஸ்லீம் அரசியல்வாதிகள் பற்றி புகழாரம் பேசுவதும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதுமாக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.

 இவ்வாறு வக்காலத்து வாங்குகின்ற குறிப்பாக கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்படாத அரசியல்வாதிகளுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மை நிலையை அறியாமல் அறிக்கை விடுகின்ற அரசியல்வாதிகள் தங்களின் வங்குரோத்து அரசியலை நிறுத்த வேண்டும். உண்மையில் எமது நிலைமை அறிந்து பேசுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமக்குத் தான் வலிகள் தெரியும்.

 தற்போது எமது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் சிலர் முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் இதைச் செய்திருக்கின்றார்கள் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கூறியவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

 ஜனதிபதியோ பிரதமரோ தங்கள் அரசாங்கத்தை அரசியலை நடத்துவதில் மாத்திரம் தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை. அதனால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் எமது மக்களுக்கு சிறந்தவர் அவர் இவர் என்று நாங்கள் சொல்லவில்லை மஹிந்த அரசிலும் சரி ஐக்கிய தேசியக் கட்சி அரசிலும் சரி எல்லா ஆட்சிக் காலத்திலும் எங்களுடைய மக்களுக்கான பிரச்சனைகளும் அழிவுகளும் இடம்பெற்றே இருக்கின்றன. அதனை யாரும் மறுக்க முடியாது.

 ஒரு இனம் பாதிக்கப்படுகின்ற போது பால்சோறு கொடுத்து கொண்டாடியவர்கள் தமி ழர்கள் அல்ல. கடந்த காலங்களில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது தமிழர்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால் அப்போது முஸ்லீம் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள். அந்நேரம் முஸ்லீம்களுக்காகப் பல தமிழ்த் தலைவர்கள் குரல் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் சிரித்து வேடிக்கை பார்க்கவில்லை. முஸ்லீம் மக்களின் இன்றை நிலை தொடர்பிலும் நாங்கள் சந்தோசம் அடைந்தவர்கள் அல்ல. முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்ட போது நாங்கள் அழுதோம், குரல் கொடுத்தோம். ஆனால் நாம் பாதிக்கப்பட்ட போது எமது மக்கள் கொல்லப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது பால்சோறு கொடுத்து மகிழ்ந்தார்கள். இது தொடர்பில் அந்த சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.