திருக்கோவிலில் இரு வர்த்தக நிலையங்கள் தீப்பற்றி எரிந்ததில் பாரிய சேதம்



திருக்கோவில் பொலிஸ்ப்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் -03 பிரதான வீதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பொலிசாரும், இராணுவத்தினரும் சுமார் ஒரு மணித்தியாலயங்கள் போராடி தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் தீ காரணமாக இரண்டு வர்த்தக நிலையங்கள் எரிந்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில்- பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்கள் 14.05.2019 செவ்வாய்க்கிழமைகாலை  திடீர் என ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் வர்த்தக நிலையத்தில் இருந்த கோடிக்கணக்கான பொருட்களும் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


இவ் தீ விபத்தானது இன்று செவ்வாய்க்கிழமை காலை முதலாவது வர்த்தக நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளதுடன் தீயை கட்டுப்படுத்துவதற்காக பொலிசாரும், இராணுவமும் குவிக்கப்பட்ட போதிலும் தீயை அனைப்பதற்கான உடனடியாக எந்தவொரு வசதிகளும் திருக்கோவில் பிரதேச சபையின் உடாக கிடைக்கப்பெறாத நிலையில் வர்த்தக நிலையத்தில் இருந்த எரிவாயு சிலீண்டர்களில் இருந்து தீ சீரிப்பாய்ந்து பாரிய வெடிப்புச் சத்தங்ளுடன் தீ மேலோங்கி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதுடன் அருகில் இருந்த வர்த்தக நிலையத்திற்கும் தீபரவியது.

இந்நிலையில் தீ ஏற்பட்டு சுமார் 30 நிமிடங்களில் அக்கரைப்பற்று மாநகர சபையில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகை தந்து தீயை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும் தீயை முற்றாக அனைக்க முடியாது அனைவரும் திண்டாட்டத்தில் அங்கும் இங்குமாக ஓடித்திரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேசசபையில் நீர் வவூசர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததுடன் பொலிசாரும், இராணுவத்தினரும், பிரதேசசபை உபதவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து மண் மற்றும் வவூசர்களில் நீரைக் கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மீண்டு அக்கரைப்பற்று மாநகர சபையில் இருந்து இரண்டாவது தீயனைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடரந்து  பிரதேசத்தில் மக்கள் என்ன நடப்பது என புரியாது அச்சத்துடன் காணப்பட்டதுடன் பிரதான வீதியில் போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டு இராணுவம், பொலிசார் குவிக்கப்பட்டு தீயை முற்றாக கட்டுப்படுத்தியதுடன் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாது பொலிசார், இராணுவத்தினர் பாதுகாப்பக்களை வழங்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ் தீவிபத்து ஏற்படும் போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான பெண் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்படுவதுடன் இவ் தீ விபத்து தொடர்பாக முழுமையான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஈடுபட்டு வருகின்றர்.