கிழக்கின் கல்வியின் நிலைமை ?


 - ஆர்.சயனொளிபவன் & TEAM - 
 •  கல்வியின் முக்கியத்துவம் 
 • கல்வியில் போரின் தாக்கம் 
 • கல்வியில் மாவட்ட ரீதியில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய காரணிகள்
                 - திருகோணமலை மாவட்டம்
                 - மட்டக்களப்பு மாவட்டம்
                 - அம்பாறை மாவட்டம்   

சமூகங்களின் வளர்ச்சியில் கல்வி பாரிய பங்கு வகிக்கின்றது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். ஆனால் கல்வியின் முக்கியத்துவம் எப்போது ஒரு சமூகதிற்கு தெரிய வருகின்றது என்றால் அதற்கு உரிய தேவை வருகின்ற போது தான். கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலப்பகுதியில் இருந்து இப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ், முஸ்லீம் மக்களுக்கு கல்வியின் தேவை பாரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. இன்றும் இதனை பிரதிபலிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தின் கல்வியின் நிலை இருக்கின்றது. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களிலும் கிழக்கு மாகாணம் கல்வியில் 9 வது இடத்தில் இருப்பதும் மீண்டும் ஒரு முறை கிழக்கின் கல்வியின் நிலையை தெளிவாக தென்படுத்துகின்றது.

கிழக்கு மாகாணத்தை பார்ப்போமாயின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை  ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய  ஒரு மாகாணமாகவும் மேலும் இலங்கையிலேயே மிக நீண்ட மாகாணமாகவும்  வடக்கே தென்னைமரவாடி திருகோணமலை பகுதியில் ஆரம்பித்து தெற்கே குமனை அம்பாறை வரையிலான  300 கிலோமைல்கல் வரை நீண்ட கரையோர பகுதியை உள்ளடக்கிய ஒரு மாகாணமாகும் . மேலும் இவ் மாகாணம் மேற்கே அனுராதபுரம், பொலநறுவை, மாத்தளை, பதுளை, மொனராகலை அம்பாந்தோட்டை மாவட்டங்களை எல்லையாகவும் கொண்ட மாகாணமாகவும்   அமைந்துள்ளது. கிழக்கை  பொறுத்தளவில் தமிழ் மக்கள் தென்னைமரவாடியில் இருந்து பாணமை வரை நில தொடர்பற்ற முறையில் தொட்டம்  தொட்டமாக வாழ்ந்து வருகின்றனர். போர் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை பார்ப்போமானால்  அம்பாறை தேர்தல் தொகுதி தவிர்த்து ஏனையபகுதிகளில் 50% வரையிலான நில பகுதியும் குறிப்பாக  இவ் நில பகுதியில் வாழ்ந்த  100% விகிதமும் தமிழ்மக்களை கொண்ட ஒரு பகுதியாகவும்  இருந்ததும் தெரிந்ததே . இவற்றுள் குறிப்பிடத்தக்க பாதகமான விடயம் என்னவெனில் போர் காலத்தில் இப்பகுதிகளில் வாழ்ந்த  கூடுதலான மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை மட்டுமே வழங்கக்கூடிய தன்மையே இருந்ததும் மேலும் இதன் எதிர்மறையான தாக்கம் இன்றும்  கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தின் கல்வியின் பின்னடைவிற்கு  ஒரு  முக்கியமான  காரணமாகவும் உள்ளது.

கல்வியின் முக்கியத்துவம்.

கிழக்கில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படாதற்கு இவையும் காரணங்களாக அமைந்துள்ளன 
 • கிழக்கை பொறுத்தளவில் இலங்கையிலே வளங்கள்  நிறைந்த பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. குறிப்பாக பெருமளவு நிலவளம், நீர்வளம், கடல்வளம் நிறைந்த பகுதிகளை கொண்டதாகவும் இங்கு வாழ்கின்ற மக்களுக்கு காலம் காலமாக விவசாயம், பண்ணை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்பிடி, சிறுகைத்தொழில் முயற்சிகள் என தமது வாழ்வாதாரத்திற்கு தேவையான வளம் இருந்ததனால் பெரும்பாலானோருக்கு கல்வியை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமோ அல்லது கட்டாயமோ இருக்கவில்லை .
 • இம் மாகாணம் பெரும் நிலப்பரப்பை கொண்ட ஒரு பகுதியாக காணப்படுவதாலும் மக்கள் தொட்டம் தொட்டமாக வாழ்வதனாலும் மேலும் தொடர்ச்சியான நிலப்பரப்பை கொண்டிராததினாலும் அதாவது பல இடங்களில் நீரோட்டங்கள் நிலப்பகுதிகளை பிரிப்பதாலும் நிலப்பகுதிகளை தொடர்வுபடுத்துவதற்கு தேவையான அளவு பாலங்கள் அமைக்கைக்கப்படாததினாலும் மேலும் இக் காரணிகளால் தொடர்ச்சியான போக்குவரத்திற்கு பெரும் தடையாக இருந்ததினாலும் குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மற்றைய பகுதிகளுக்கு செல்லாமல் தமது பகுதிகளுக்குள்ளேயே வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடிய தன்மையை உருவாக்கி கொண்டனர் . இந் நிலையே அண்மைக்காலம் வரை நிலவியது. மேலும் இம் மக்களுக்கு கல்வி பற்றிய அக்கறையே இருக்கவில்லை.
 • இலங்கையை ஆண்ட அந்நியர்கள் கடல் மார்க்கமாக தமது பயனங்களை மேற்கொண்டதாலும் கிழக்கில் மூன்று பகுதிகளை தமது இறங்கு துறையாக பயன்படுத்தியதால் காலப்போக்கில் இப்பகுதிகள் நகரங்களாக மாற்றம் கண்டன. குறிப்பிட்ட மூன்று இடங்களான திருகோணமலை நகர் பகுதி, மட்டு நகர்ப்பகுதி மற்றும் கல்முனை நகர் பகுதிகளில் பாடசாலைகளை அமைத்து மேலும் கிழக்கில் ஏனைய பகுதிகளில் இருந்த தமக்கு உகந்தவர்கள் என்று கருதிய மக்களை மட்டுமே குடியேற்றியது மட்டுமன்றி அவர்களில் ஒரு சிறுதொகையினரை கல்வியாளர்களாக்கியதும் தெரிந்ததே. அதன் தொடர்சியாக அன்றில் இருந்து இன்றுவரை இம் மாவட்டங்களில் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற மாணவர்கள் முறையான மற்றும் முழுமையான பாடசாலை கல்வியை பெறவேண்டுமாயின் இன்றும் குறிப்பிட்ட நகர் பகுதிகளுக்கு செல்லவேண்டிய நிலையே நிலவுக்கின்றது.
 • மேற்குறிப்பிட்ட நகர்ப்பதிகளில் இருந்து நெடுஞ்சாலைகளை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அடிப்படை கல்வியும் மேலும் கரையோர நெடுஞ்சாலைகளில் இருந்து மேற்குப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு இன்றுவரை கல்விகற்பதற்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படவில்லை 
 • இன்றுவரை குறிப்பிட்ட மூன்று நகர்ப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் கல்விகற்பிப்பதற்கு தேவையான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினாலும் மேலும் அப்பகுதிகளில் நிலவுகின்ற பொருளாதார காரணங்களால் சிறுவயதிலயே பெற்றோருடன் தொழிலுக்கு செல்லுதல் மற்றும் சிறுவயது திருமணம் கல்வியில் நாட்டமின்மை போன்ற காரணங்கள் இன்றும் நிலவுவதை காணக்கூடியதாகவுள்ளது 
 • மிகவும் அண்மித்த காலப்பகுதி வரை கிழக்கில் உள்ள நகர்ப்பகுதிகளை விட ஏனைய பகுதிகள் ஆசிரியர்கள் வளத்தில் தன்னிறைவு அடையாத பகுதிகளாகவும் அத்தோடு நகர் பகுதிகளில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கு முறையான பாதைகள் மற்றும் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினாலும் இன்றும் இப்பகுதிகளுக்கு ஆசிரியர்களை கொண்டு செல்வது பாரிய பிரச்சினையாக உள்ளது.
 • விலங்குகளின் தொல்லையினால் தற்போது குறிப்பாக காட்டு யானைகளின் தாக்குதல்களால்  காட்டு பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிராமங்கள்  ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின் செயலிழந்து போவதையும் காணக்கூடியதாகவுள்ளது 
மேற் குறிப்பிட்ட தன்மைகளில் பல இன்றும் கிழக்கின் கல்வியின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்துள்ளதும் கல்வியில் பின் நிலைக்கான காரணமாக உள்ளது .

கல்வியில் போரின் தாக்கம்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சிகுடிச்சாறு பாடசாலை 
கிழக்கில் உள்ள மூன்று சமூகங்களுடன்  பார்க்கும் போது  போரின் தாக்கம் பாரிய அளவில் தமிழ் சமூகத்திற்கு   கல்வி, பொருளாதாரம், சுகாதாரம்,மற்றும் அடிப்படை கட்டுமான அபிவிருத்தி  என்பனவற்றில் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியை பொறுத்தளவில் போர் காலத்தில் குறிப்பாக விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பலான  பகுதிகளில் 
 • அடிப்படை கல்வியை வழங்ககூடிய நிலையே இருந்ததும்
 • ஒரு சில பகுதிகளில் கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை கற்பிற்கும் பாடசாலைகளும் 
 • மேலும் மிக குறுகிய இடங்களில் கல்விப்பொதுத்தராதர உயர்தரம் கலை பிரிவு வரை கற்பிக்கும் பாடசாலைகள் இருந்ததும் 
 • ஒரு சில ஆசிரியர்களே புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்ததாலும்  அரச கட்டுப்பாட்டு பகுதிகளில்  இருந்த ஆசிரியர்கள் பாதுகாப்பு கெடுபிடிகள்  மற்றும் பீதியினாலும் புலிகளின்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு போக மறுத்ததாலும். இப் பகுதிகளில் இரண்டம் நிலை கல்வி தரம் 6 இல் இருந்து தரம் 11   வரை கற்கும் மாணவர்களின் கல்வியும் போர் நடைபெற்ற 20 வருட காலப்பகுதிக்குள் பெரும் பாதிப்புக்குள்ளானது . அத்தோடு கல்வி பொதுத்தராதர  உயர்தரத்தை பொறுத்தவகையில் கைவிட்டு எண்ணக்கூடிய ஒரு சில மாணவர்களே  ஆசிரியர்கள் அற்ற நிலையில் தமது கல்வியை மேற்கொள்ள  வேண்டிய நிலையில் இருந்தனர். மேலும் இம் மாணவர்களால் கலைத்துறையை மட்டுமே  தொடரமுடிந்தது 
 • முறையான கல்வி வழங்கப்படாத நிலையில் பெரும்பாலான இளைஞர்களும் யுவதிகளும் சிறுவயதிலயே போராட்டத்தில் இணையும் தன்மையும் பொதுவாக காணப்பட்டது.
 • புலிகளின் கட்டுப்பாட்டு  பகுதிகளில் வாழ்ந்த மக்களில் 95% அளவிலானவர்கள் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டதாலும் மேலும் இம் முயற்சிகள் போர் காலங்களில்  பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாலும்  இப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாகவும் மேலும் இந்த  நிலையில் இவர்களால் தமது பிள்ளைகளை அரச கட்டுப்பாட்டுபகுதிகளுக்கு  அனுப்பி படிப்பிக்கக்கூடிய  நிலையிலும்  இருக்கவில்லை 
 • போர் காலத்தில் புலிகளின் பகுதிகளில் பௌதீகவள  புணருத்தாரணத்திற்கும்  மற்றும் அபிவிருத்திக்கும்  என மிக சிறிய அளவிலான  நிதியே ஒதுக்கப்பட்டதால் முறையான கல்வி அப்பகுதிகளில் வாழ்ந்த  மக்களுக்கு வழங்கமுடியாத நிலையும் மேலும் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் கட்டிடங்கள்   குண்டுத்தாக்குதல்கள் மற்றும் பராமரிக்கப்படாமையால்  இடிந்த நிலையில் காணப்பட்டதாலும் அப்பகுதிகளில் உள்ள மாணவர்களின் வகுப்புகள் மர நிழல்களிலும்  நடத்த வேண்டிய நிலையை உருவாகியதையும் அவற்றுள்  சில இடங்களில்  இன்றுவரை இந் நிலை  தொடர்வதையும்  காணக்கூடியதாக உள்ளது.
ஸ்ரீ முருகன் தமிழ் பாடசாலை -மட்டக்களப்பு 

கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தில் 40% அளவிலான சனத்தொகை புலிகளின் கட்டுப்பாட்டு  பகுதியில் இருந்ததினால் மேலும் இப் பகுதியில் வாழ்ந்த மாணவர்களுக்கு  முறையான அடிப்படை கல்வி வழங்கப்படாததனால் .  இப்பகுதிகளில் இருந்து இடைநிலை மற்றும் மேல் நிலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே  இருந்தது. இந்நிலை கிழக்கின் கல்வியின் நிலையை மிகவும் பின்னிலைக்கு தள்ளியுள்ளது.

மேலும் நவீன காலத்தில் கணித, விஞ்ஞான, தொழில் நுட்ப துறைகளில் கல்வி  கற்கும் மாணவர்களுக்கு அவர்கள் தமது பாடசாலை கல்வியை முறையாக முடிக்கும் பட்சத்தில்   உயர்கல்வியை தொடர்வதற்கோ  அல்லது வேலைவாய்ப்புகளை பெறுவதற்கோ உரிய  சந்தர்ப்பங்கள்  அதிகமாக  காணப்படுகின்றது    ,  ஆனால் புலிகளின் கட்டுப்பட்டு பகுதியாக இருந்த பகுதிகளில் வாழ்ந்த  மாணவர்களுக்கு மேலே குறிப்பிட்ட துறைகளில் கற்பதற்கு அறவே சந்தர்ப்பங்கள்  வழங்கப்படவில்லை  . மாறாக குறிப்பிட்ட பகுதிகளில் வாழுகின்ற திறமை வாய்ந்த மாணவர்களுக்கு கலை துறைக்கு மட்டுமே  செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை  இன்றும்  நிலவுகின்றது 

போர் முடிவிற்கு வந்து 10 வருடங்கள் கழிந்தநிலையிலும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு  பகுதிகளாக இருந்த இடங்களில்  கல்வியின் நிலையில் பெருமளவு மாற்றம் காணாத நிலையே  காணப்படுகின்றன. 

 • குறிப்பாக இடைநிலை கல்வியை பொறுத்த அளவில் கணித,விஞ்ஞான, ஆங்கில பாடநெறிகளை கற்பிப்பதற்கு பாரிய அளவில் ஆசிரியர் வளம் அற்ற நிலையிலும் 
 • இடைநிலை பாடசாலைகளில் பலவற்றில் விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் அற்றநிலையிலும் 
 • இந்நிலையை கடந்து மாணவர்கள் கல்விப்பொதுத்தராதர பரீட்சையில்  நல்ல பெறுபேறுகளை பெற்று மேற்குறிப்பிட்ட துறைகளில் உயர்தர கல்வியை மேற்கொள்ளுவதற்கு தற்போது  ஒருசில பாடசாலைகள்  மட்டுமே  இப் பகுதிகளில் உள்ளதாலும் 
 • அவ்வாறு மாணவர்கள் குறிப்பிட்ட துறைகளில்  உயர் தர கல்வியை கற்க முற்பட்டாலும் போதிய அளவு ஆசிரியர் வளம் அற்றநிலை காணப்படுவதாலும் 
 • மேலும் இம்மாணவர்களின்  பெற்றோர்களில் கூடுதலானோர் இம் மாணவர்களை முறையாக வழிப்படுத்தக்கூடிய அனுபவம் அற்றவர்களாகவும்  மற்றும் பொருளாதார ரீதியாக நலிவுற்று காணப்படுவதாலும்  மிக கூடிய திறமை வாய்ந்த அனைத்து மாணவர்களும்  கலை துறையையே தேர்ந்த்தெடுப்பதை பரவலாக காணக்கூடியதாகவும் உள்ளது .

இந்நிலை  இரு விடயங்களை தெளிவாக தென்படுத்துகின்ற்றது 
 • கலைத்துறை தவிர்ந்த ஏனைய துறைகளை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக உள்ளதையும் 
 • இதன் தொடர்ச்சியாக கிழக்கில் கல்வியின் நிலையிலும் மாற்றம் காண்பதற்கு  மிக நீண்ட  காலம் தேவைப்படலாம்  என்பதையும் தென்படுத்துகின்ற்றது 
கல்வியில் மாவட்ட ரீதியில் மாற்றத்தை  ஏற்படுத்தக்கூடிய காரணிகள்

முழு அளவிலான பாடசாலை கல்வியை மாணவர்களுக்கு வழங்க கூடிய வகையில் இரு வகையிலான பாடசாலை முறை உருவாக்கப்பட்டுள்ளது 
 • தேசிய பாடசாலைகள் 
களுதாவளை மகாவித்தியாலயம் - தேசிய பாடசாலை 

இவ் வகையான பாடசாலைகள் மத்திய கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் பாடசாலைகளாகவும் மற்றும் இப் பாடசாலைகளுக்கு போதிய அளவு பௌதிக   மற்றும் ஆசிரிய வளங்களும்  ஒதுக்கப்பட்டு  பெரும்தொகையான மாணவர்களையும் உள்வாங்கக்கூடிய தன்மையும் மேலும்   மாணவர்களுக்கு தரமான  கல்வியை வழங்கக்கூடிய    ஒரு பாடசாலை  அமைப்பு முறையாகவும்   காணப்படுகின்றது.  இப் பாடசாலைகளில் கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், வர்த்தகம், கலை பிரிவுகளில் கல்வி கற்பதற்கான வசதிகள் அமைந்ததாகவும் காணப்படுகின்றது. கூடுதலான தேசிய பாடசாலைகள் நகர் பகுதிகளை மையமாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.
 • 1 AB பாடசாலைகள் 
இவ் வகையான பாடசாலைகள் மாகாண சபை கட்டமைப்புக்குள் உட்படுத்தப்பட்டு  வலய கல்விப்பணிமனையின்  நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கிராம புற  சூழ்நிலையை மையப்படுத்தி பல கிராமம்களுக்கு ஒரு 1 AB பாடசாலை என்றமுறையில் குறிப்பாக கிராமப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் தமது பாடசாலை கல்வியை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். பொதுவாக இப் பாடசாலைகளில் கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், வர்த்தகம், கலை பிரிவுகளில்  கல்வி கற்பதற்கான வசதிகள் அமைந்ததாக காணப்படுகின்றது .

மேலும் இவ் வகையான பாடசாலைகளின் உருவாக்கம் மாணவர்கள் தமது கல்வியை முறையாகவும் முழுமையாகவும் நிறைவு செய்வதற்கு இன்றியமையாததாக அமையும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.  மாவட்ட ரீதியில் இந்த இருவகை பாடசாலைகளின் உருவாக்கம் நிச்சயமாக மாகாண அளவில் கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் மாவட்ட ரீதியில் குறிப்பாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இவ் இரு வகையான பாடசாலைகள் எந்த அளவில் அமைத்துள்ளது என்று பார்ப்போமாயின் 

 • திருகோணமலை மாவட்டம் 
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த அளவில் மாவட்ட சனத்தொகையில் அண்ணளவாக 30% தமிழ் மக்களாக உள்ளனர். இம் மாவட்டத்தை பொறுத்தளவில்  தமிழ் மக்கள் மாவட்ட அளவில் நில தொடர்பற்ற வகையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிட தக்க ஒரு விடயமாகும் . திருமலை நகர் பகுதியில் இருந்து 
 • வடக்கே தென்னைமரத்து  வாடி பகுதியில் ஆரம்பித்து , குச்சவெளி, நிலாவெளி பகுதியிலும்  
 • வட மேற்கு  பகுதியில் தற்போதைய மொரவெவ - முன்னைய பன்குளம் பகுதியிலும் 
 • மேற்கே தம்பலகாமம் பகுதியிலும் 
 • தென் மேற்கே கந்தளாய் பகுதியிலும் 
 • தெற்கே ஈச்சிலம்பற்று   பகுதியில் ஆரம்பித்து, கிளிவெட்டி, சம்பூர், தோப்பூர், சேனையூர் , கட்டப்பறிச்சான் பகுதியிலும் 
தமிழ் மக்கள் கூடுதலான விகிதத்தில்   வாழ்கின்றனர். ஆனால் தேசிய பாடசாலைகள் பொறுத்த அளவில் திருமலை நகர் பகுதியில் மட்டுமே அமைந்துள்ளது.  அதே வேளை  பெயரளவில்   1AB பாடசாலைகள் கடந்த வருடம்  சேனையூரிலும் மற்றும் இலங்கைத்துறை முகத்துவாரம் ஈச்சிலம்பற்று   பகுதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் வாழுகின்ற மாணவர்கள் முழுமையான பாடசாலை உயர் கல்வியை பெறவேண்டுமாயின் இன்றும் திருமலை நகர் பகுதிக்கே செல்லவேண்டிய நிலை உள்ளது.

 • மட்டக்களப்பு மாவட்டம் 
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தளவில் மாவட்ட சனத்தொகையில் அண்ணளவாக 74% தமிழ் மக்களாக உள்ளனர். தமிழ் மக்கள் மாவட்ட அளவில் ஓட்டமாவடி, ஏறாவூர்,காத்தான்குடி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நில தொடர்பு உள்ள  வகையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

இம் மாவட்டத்தில் குறிப்பாக தமிழ் பகுதிகளில் தேசிய பாடசாலைகள்
 • வாழைச்சேனை, மட்டுநகரை அண்டியபகுதியில் பல பாடசாலைகளும் , மற்றும் களுதாவளை, பட்டிருப்பு ஆகிய பகுதிகளிலும் 

1 AB பாடசாலைகள் 
மண்டூர் சங்கர்புரம் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்  
 • கல்குடா கல்வி வலயத்தில் -  வந்தாறுமூலையிலும்  
 • மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் - அம்பிளாந்துறை , முதலைக்குடா  , கன்னன்குடா, நாவற்காடு  பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் 
 • பட்டிருப்பு கல்வி வலயத்தில் - செட்டிபாளையம், கோட்டைக்கல்லாறு, கல்லாறு, துறைநீலாவணை பகுதிகளிலும் மற்றும் 2019 ஆண்டு மண்டூர் சங்கர்புரம், பழுகாமம் பகுதிகளில் உள்ள இரு  பாடசாலைகளிலும்
உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 1AB பாடசாலைகளை பொறுத்த அளவில் குறிப்பாக படுவான்கரை பகுதிகளில் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் கடந்த 6 வருடங்களுக்குள் உருவாக்கப்பட்டவைகள் ஆகவும் மற்றும் இவற்றுள் இரு பாடசாலைகள்  பொறுத்த அளவில் பெயரளவில் இயங்கும் பாடசாலைகளாகவும் காணப்படுகின்றன’

 • அம்பாறை மாவட்டம் 
தம்பிலுவில் மத்திய  மகா வித்தியாலயம் - தேசிய பாடசாலை 
அம்பாறை மாவட்டத்தை பொறுத்தளவில் மாவட்ட சனத்தொகையில் அண்ணளவாக 18% தமிழ் மக்களாக உள்ளனர்.தமிழ் மக்கள் மாவட்ட அளவில் நில தொடர்பற்ற வகையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதும்  ஒரு குறிப்பிட தக்க விடயமாகும். கல்முனை  நகர் பகுதியில் இருந்து 
 • தெற்கே காரைதீவு, அட்டப்பளம் , அக்கரைப்பற்றில் இருந்து பாணமை வரையும் 
 • மேற்கே வீரமுனை, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, நாவிதன்வெளி பகுதியிலும் 
தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்கின்றனர். ஆனால் தேசிய பாடசாலைகள் கல்முனை  நகர் பகுதி, மற்றும் அக்கரைப்பற்று , தம்பிலுவில் ,என அமைந்துள்ளன.

 அதே வேளை  1AB பாடசாலைகளை பொறுத்த அளவில் 
 • தெற்கே  திருக்கோவில் கல்வி வலயத்தில்  , திருக்கோவில், விநாயகபுரம் பகுதிகளில் உள்ள 2 பாடசாலைகளிலும் 
 • சம்மாந்துறை  கல்வி வலயத்தில் பெயர்   அளவில் இரணைமடுவில் உள்ள ஒரு பாடசாலைக்கும் .
வழங்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் வாழுகின்ற மாணவர்கள் முழுமையா பாடசாலை உயர் கல்வியை பெறவேண்டுமாயின் இன்றும் கல்முனை  நகர் பகுதிக்கே செல்லவேண்டிய நிலை உள்ளது.

கல்வியின் முழு மாற்றம் மேற்குறிப்பிட்ட இருவகையான பாடசாலைகளின் உருவாக்கம் மற்றும் குறிப்பாக கிராமப்பகுதிகளை மையமாக கொண்டு இயங்கும்  1AB பாடசாலைகளின் உருவாக்கம் மற்றும் ஏற்கனவே உருவாக்கப்பட்டு பெரும் பௌதீகவளம்  ஆசிரிய வளம் பற்றாக்குறையால் தத்தளித்து கொண்டிருக்கும் 1AB பாடசாலைகள் தேவையான  வளங்களை  பெற்று முழுமையாக இயங்குகின்ற பட்சத்திலேயே இப் பாடசாலைகளால் கிராமசூழல்களிள் குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மாணவர்களின் கல்வியில் ஒரு முழுமையான மாற்றத்தை கொண்டுவரமுடியும்.

கல்வியே அழியாத செல்வம்’ என்ற கூற்றிக்கு ஏற்றாற்போல்  கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வு கிராமப்புறங்களில் வாழுகின்ற மக்களிடையே தெளிவாக ஏற்படுத்தப்படவேண்டும். இன்றும் அடிமட்டத்தில் உள்ள கிராமப்புற கல்விவிருத்திக்கு தடையாக உள்ள முக்கிய காரணிகளான ஆசிரியர் வளம் மற்றும் பௌதீகவளம் என்பன இப் பிரதேசங்ககளுக்கு எடுத்துச்செல்வதற்கான முயற்சிகள்  பாரிய அளவில்  மேற்கொள்ளப்படவேண்டும். இப்படியான தடைகள் இனங்காணப்பட்டு மேலும் அவை களையப்படும் பட்சத்திலயேதான் கிழக்கின்  கல்வியில் நேர்த்தியானதும் நிரந்தரமானதுமான  முன்னேற்றம் ஏற்படும்.

 - ஆர்.சயனொளிபவன் & TEAM - 

குறிப்பு : கிழக்கின் கல்வியின் நிலைமை தொடர்பான கட்டுரைகளும்    தொடரும்….