காட்டு யானையின் தாக்குதல் குடும்பஸ்த்தா் பலி
(மு.கோகிலன்)

கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 பேர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (4) காலை வயலுக்கு தமது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கொண்டையன் கேணி வாழைச்சேனையைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சி.கந்தசாமி வயது 52 என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மனைவி அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார்.

வாழைச்சேனையில் இருந்து முறுத்தானையிலுள்ள தமது வயலுக்கு இருவரும் செல்லும் போது வேப்பையடி திடல் காட்டு வழிப்பாதையில் மறைந்து நின்ற யானை தங்களை தாக்கியதாகவும் தாம் யானையின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பித்துக்கொள்ள ஓடியதாகவும் கணவர் தாக்குதலுக்கு பலியாகி உயிரிழந்துள்ளதாகவும் மரணமடைந்தவரின் மனைவி கவலையுடன் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதாரா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை புதன்கிழமை மட்டக்களப்பு கரடியனாறு குசலான் மலைப் பிரதேசத்தில் வைத்து பங்குடாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட 2 பிள்ளைகளின் தந்தையும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.