கடலலையினால் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் சடலம் கரையொதுங்கியது.





(வி.சுகிர்தகுமார்)


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை பிரதேசத்தில் கடல் பகுதியில் நேற்று (19) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த நிலையில் கடலலையினால் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞரின் சடலம் இன்று(20) நண்பகல் அக்கரைப்பற்று தம்பட்டை விளையாட்டு மைதான பகுதியில் கரையொதுங்கியது.

அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய கமலநாதன் திசாப்ஜோய் எனும் இளைஞனே இவ்வாறு கடலில் காணாமல் போன நிலையில் சடலமாக பொதுமக்களால் மீட்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் தம்பட்டை பிள்ளையார் ஆலய முன்பாக சிறியமலைகள் உள்ள ஆபத்தான கடல் பிரதேசத்தில் ஆறு இளைஞர்கள் நீராடியுள்ளனர். இந்நிலையில் ஒருவர் கடலலையில் சிக்குண்டு அள்ளுண்டு செல்லப்பட்டார்.

குறித்த ஆறு இளைஞர்களும் நண்பர்கள் என்பதுடன் நாளாந்த சம்பள அடிப்படையில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சியினை பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொண்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவர்கள் ஆறுபேரும் இன்று நண்பகல் அளவில் தம்பட்டை பிரதேசத்திற்கு வருகை தந்து உறவினர் வீடுகளுக்கு சென்று ஆடைகளை மாற்றியதன் பிற்பாடு கடலில் நீராட சென்றுள்ளனர்.

இதன்போதே ஒருவர் கடலலையில் சிக்குண்டு அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதனை கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற நண்பர்கள் உறவினர்களுக்கு தகவலை வழங்கியதையடுத்து பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் ஏனைய 5 நண்பர்களையும் விசாரணையின் பொருட்டு திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்..

இதேவேளை குறித்த இளைஞனை தேடி உறவினர்களும் பொலிசாரும் நேற்றுமுதல் தேடிவந்த நிலையில் இன்று சடலமாக மீட்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.