22,200 ரூபாய் கொண்ட பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த தரம் 9 மாணவன் – செங்கலடியில் நெகிழ்ச்சி சம்பவம்



கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் தரம் 9சி வகுப்பில் கல்வி கற்கும் எஸ்.நிலோஸ் எனும் மாணவன் இன்று காலையில் பாடசாலைக்கு வரும்போது பணப்பை ஒன்று வீதியில் கடப்பதை அவதானித்த நிலையில் குறித்த பணப்பையை எடுத்து பாடசாலையில் ஒப்படைந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த செங்கலடி பகுதியில் வசிக்கும் குறித்த மாணவனே இந்த பணப்பையை கண்டு உரியவரிடம் சேர்ப்பதற்கு வழிசெய்துள்ளார். குறித்த மாணவன் வகுப்பறையில் நல்ல சிறப்பான மனப்பாங்குடன் நடந்துகொள்ளும் ஒரு மாணவன் என்பதுடன் குறித்த மாணவனின் குடும்ப நிலைiயோ சாதாரணமான ஒரு நிலையிலும் குறித்த பணப்பையை கண்டதும் பாடசாலையில் ஒப்படைத்துள்ளார்.

குறித்த பணப்பைக்குள் 22,200 ரூபாய் பணம், வங்கி அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்துள்ள நிலையில் எதையும் தான் எடுத்தும் பார்க்காமல் குறித்த மாணவன் பாடசாலையிலே ஒப்படைத்துள்ளார்.

குறித்த பணப்பையை பெற்றுக்கொண்ட பாடசாலையின் அதிபர் கே. சுவர்னேஸ்வரன் பணப்பையை எடுத்து பார்த்ததும் உரியவரிடம் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியை எடுத்ததுடன் பணப்பைக்குரிய நபரை பாடசாலைக்குள் வரவழைத்து உரிய மாணவர் மற்றும் ஆசிரியர்கள் அதிபர் முன்னிலையில் பணப்பையை கொடுத்தார்.

குறித்த பணப்பையானது கொம்மாதுறை பிரதான வீதியிலுள்ள கே.கே. குமார் மரக்கறி விற்பனை நிலைய பதில் முகாமையாளர் சிவநாதன் சிவசங்கரினுடையது என தெரியவந்துள்ளது.

குறித்த பணப்பை உரிமையாளர் சிவசங்கர் அதிபார் மற்றும் ஆசிரியர்கள் பணப்பையை கண்டு எடுத்த மாணவரிடம் இருந்து பெற்றுக்கொண்டதும், குறித்த மாணவனை பாராட்டி இப்படியான காலத்தில் நல்லதொரு குடும்ப பின்னணியில் பிறந்த மாணவரினால் தான் இவ்வாறான நல்ல நடத்தை காணக்கூடியதாக இருக்கும், அத்தோடு பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் குறித்த மாணவர் போன்ற சமூதாயத்திற்கு நல்லமுறையில் ஒழுக்கத்துடன் கற்பிதால்தான் இவர் போன்ற மாணவர்கள் உருவாகின்றார்கள் என பாராட்டியதுடன், குறித்த மாணவரிடம் உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என கேட்டபோது விளையாட்டுக்குத் தேவையாக பாதணி கேட்டுள்ளார், உடனே குறித்த மாணவனுக்கு செங்கலடி நகர் பகுதியில் ஒரு சோடி விளையாட்டுக்கு அணியக்கூடிய பாதணிகளை வாங்கி கொடுத்து மாணவர்களையும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.