கல்லாறு கிங் வோய்சின் “தலைக்கனம்” குறுந்திரைப்படம் வெளியீட்டு விழா



(ரவிப்ரியா)

கல்லாறு கிங் வோய்சின் 4வது தயாரிப்பான “தலைக்கனம்” குறும்படம் வெளியீட்டு விழா, உள்ளுர் அதி முக்கிய பிரமுகர்களுக்கு லக்ஸ்மன்தலைமையில் இந்து கலாசார மண்டபத்தில் கடந்த சனியன்று மாலை வைபவ ரீதியாக காண்பிக்கப்பட்டது.

சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வண்ணக்கர் மூ.மன்மதராஜா, கணக்குப்பிள்ளை கமல்ராஜ், பிதேச சபை உறுப்பினர் சண்முகம்கணேசநாதன், பொறியியலாளர் ம.டினேஸ். கோபி. உட்பட பல முக்கியஸ்தர்களும் இணைந்து வெளியீட்டை அரம்பித்து வைத்தனர். தலைக்கனம் பற்றி பின்வரும் குறிப்புக்களை முன்வைக்கலாம்.

இன்று இளைஞர்களின் கவனம் குறும் படங்கள் பக்கம் வெகுவாக திசை திரும்பி இருக்கின்றது. ஏராளமான குறும் திரைப்படங்கள் இணையத்தளங்கள் மூலம் நாளும் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

சமூகத்திற்கு நல்ல செய்தி ஒன்றை தெரிவிக்கும் கலை வடிவமாக அது வலம் வந்து கொண்டிருக்கின்றது. அந்தவகையில் கல்லாறு கிங்வோய்சின் 4வது தயாரிப்பாக தலைக்கனம் தலைகாட்டியிருக்கின்றது.

சமூகப் பிரக்ஞையுடன், கூரிய சமூகப் பார்வையுடன் ஒரு படைப்பு வெளிவரும் போதுதான் அது சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தும்.;அதுவும் புதுமையான புதிய கருத்துக்களை சொல்லும்போது அது சமூகத்தில் நல்ல தாக்கத்தைச் செலுத்தும்.

தலைக்கனத்தின் கதைக்களம் பட்டம், நட்பு, தொழில். என்ற மூன்று விடயங்களை யதார்த்தமாகத் தாங்கி நிற்கின்றது. இவற்றை மையமாகவைத்து கதை நகர்த்தப்படுகின்றது. இறுதியில் உண்மை நட்பே உயர்ந்தது என்பதை லக்ஸ்மன் கதாபாத்திரம் மூலம் வெகு யதார்த்தமாக வெளிப்படுத்தப்படுகின்றது.

மற்றுமொரு கோணத்தில் செய்யும் தொழிலே தெய்வம் என நினைப்பவர்களுக்கு அதனால் உயர்வு நிச்சயம் என்பதும் வெளிப்படுத்தப்படுகின்றது. பட்டம் கிடைத்ததும் நண்பர்களை உதாசீனம் செய்யும் யனு பாத்திரமே தலைக்கனமாகச் சித்தரிக்கப்டுகின்றது.பட்டம் பெறாத நண்பர் உயர் பதவி வகிக்கும் நிறுவனத்தில் வேலை தேடிச் செல்வதும் அதன் பெறுபேறும் யனுவின் தலைக்கனத்தை தகர்த்து  உண்மையான நட்பின் தார்பரியத்தை மிக அழுத்தமாக உணர்த்துகின்றது. அத்துடன் வாழ்வின் உயர்விற்கு பட்டம் என்பது இரண்டாம்பட்சமே என்பதை நல்லதொரு செய்தியாக இளைஞர்களிடம் முன்வைக்கின்றது.

கதையைப் பொறுத்தவரையில் புதுமையில்லாவிட்டாலும் தற்போதைய இளைஞர்களின் மனநிலையை நன்கு பிரதிபலிக்கின்றது.

பிரதான பாத்திரங்களாக யனு, லக்ஸ்மன் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பாத்திரங்களை ஏற்ற இருவரும் தங்களின் இயல்பானநடிப்பின் மூலம் எம்மை கவரவே செய்கின்றனர். அதிலும் லக்ஸ்மனின் பாத்திரம் மனநிறைவை தருகின்றது. இளைஞர்களுக்கு ஒரு மொடல்றோலாக அமைகின்றது.

ஒரு இடத்தில் மட்டும் அறிவுரை கூறுவது போன்ற காட்சி வலிந்து உள்வாங்கபபட்டிருப்பதுபோல் தெரிகின்றது. நட்பைப் பற்றியபின்நோக்கிய பார்வையில் பள்ளிப் பருவ நட்புக்கான அழுத்தம் இன்னும் சில காட்சிகளைச் சேர்த்து வலுச் சேர்த்திருக்கலாம்.

ஒளிப்பதிவில் கிராமத்தின் இயற்கை அழகு முழுமை பெறவில்லை. எனினும் ஒளியமைப்பும் ஒலியமைப்பும் துல்லியமாக இருப்பது தலைக்கனத்தை தலை நிமிர வைத்திருக்கின்றது. மொத்தத்தில் நல்லதொரு முயற்சி.