மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நெருக்கடி –அனைத்து சிகிச்சை பிரிவுகளும் நிறுத்தம்.



( எரிக் )

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளை கழிவுகளை அகற்றும் வரையில் அவசர சிகிச்சை நடவடிக்கைகளை தவிர வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லையென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதனா வைத்தியசாலையின் Yellow waste தொற்று மற்றும் கூரான கழிவுகளை திராய்மடு இல் உள்ள நிலையத்தில் Burning and metamaizer மூலமாக ஓரளவுக்கு கழிவு முகாமைத்துவம் செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திராய்மடு பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் காரணமாக கடந்த ஆறுமாதங்களாக கழிவுகளை எரிக்கும் செயற்பாடு முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் நாளாந்தம் வைத்தியசாலையில் இருந்து வரும் கழிவுகள் சாராசரியாக 400கிலோ திராய்மடுவில் தற்காலிகமாக சேர்த்து வைக்கப்பட்டு தற்போது 70 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக குறித்த கழிவுகள் சேர்ந்துள்ளன.

இதனை இறுதியகற்றல் செய்யும் நோக்கோடும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை மிக மிக குறைந்தளவில் குறைப்பதற்காகவும் வைத்தியசாலை நிருவாகம் மற்றும் Micro biologyist consultant ஆகியோர் பகீரதபிரயத்தனத்தின் மத்தியில் Schedule waste disposal அனுமதி வழங்கக்கூடிய நிறுவனமான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடனும் இடத்தெரிவு மற்றும் செங்கலடி பிரதேச செயலாளரின் இட அனுமதியுடனும் வேப்பவெட்டுவானில் சூழல் பாதிப்பற்ற நிலையில் குறித்த கழிவுகளை இன்று இறுதியழிப்பு செய்வதற்காக கொண்டு சென்றவேளையில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் எதிர்ப்பினால் இறுதி அழிப்பு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

இதேவேளையில் இதை அறிந்த திராய்மடு பொதுமக்கள் அந்த குப்பைகளை மீண்டும் திராய்மடுவில் சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனால் 05 பாரஊர்திகளில் ஏற்றப்பட்ட குப்பைகளை எங்குமே இறக்க முடியாத நிலைமையினால் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளாந்தம் வைத்தியசாலையில் சேரும் கழிவுகளை அகற்ற முடியாமல் விடுதிகளில் குப்பைகள் தேங்கியிருப்பதனால் பாதுகாப்பான நோயாளர் சிகிச்சைகளில் பாரியசவால்களை எதிர் கொள்வதனால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக வைத்தியசாலை தொழிற்சங்கத்தின்ர் அறிவித்துள்ளனர்.

தற்போது வீதிகளில் கழிவு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் போராட்டங்களில் ஈடுபடுவது கவலைக்குரிய விடயம் என சமூக விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.