துரிதமாக முன்னெடுக்கப்படும் மாநகர வேலைத்திட்டங்கள்



மட்டக்களப்பு மாநகர சபையினால்  பல அபிவிருத்திச் செயற்திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மாநகர மேற்பார்வையிலும் திணைக்களங்கள், அமைச்சுக்கள் வாயிலாகவும் மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

அத் திட்டங்களின் முன்னெடுப்புக்களை மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ தி.சரவணபவன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பிரதமரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பு நிலையத்தின் கட்டிட நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதுடன், அதன் நிர்மாணத்துறை அதிகாரிகளுக்கு அமைப்பு முறை சார்ந்த ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும் மாமாங்கம் பிரதேசத்தில் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயற்படுத்தப்படும் 450 மீற்றர் வீதியின் தார் ஊற்றும் பணிகளை அவதானித்ததுடன், வீதி செய்து முடிக்கப்படும் கால அவகாசம் குறித்து வேலையாட்களிடம் தெளிவூட்டினார்.

மாநகர சபையின் தெற்கு எல்லைக் கிராமமான பூநொச்சிமுனையில் அமைக்கப்படும் 1.5 மில்லின் பெறுமதியான கொங்கிறிட் இடும் சிலூரியா 4ஆம் குறுக்கு வீதியினை அவதானித்து வீதி அமைப்பு முறை பணிகளை பார்வையிட்டதுடன் கல்லடி மாரியம்மன் குறுக்கு வீதி செயற்பாடுகளையும் கண்காணித்தார்.

இவ் அபிவிருத்தி திட்டங்களைப் பார்வையிட மாநகர முதல்வருடன் மாநகர சபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் து.மதன், பு.ரூபராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன், சிலுரியா வீதியின் மேற்பார்வையின் போது உறுப்பினர் M.U.M.நிப்லார் அவர்களும் இணைந்து கொண்டார்.