சஹ்ரானின் மடிக்கணனியிலிருந்து சிக்கிய முக்கிய ஆதாரங்கள்

தொடர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான் பயன்படுத்திய மடிக்கணனியிருந்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவின் டிஜிட்டல் பகுப்பாய்வு அறையில் குறித்த கணனி வைக்கப்பட்டு, விசேட பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் எப்.பி.ஐ எனப்படும் மத்திய விசாரணைப் பிரிவினரால்  இந்த கணனி எடுத்துச் செல்லப்பட்டதாக சிலர் கூறி வருவதில் எந்ததொரு உண்மையும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரானின் கல்முனை பகுதி தொடர்பாளராக செயற்பட்ட சியாம் என அறியப்பட்ட சாவுல் ஹமீட் ஹமீஸ் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, பெறப்பட்ட தகவல்களுக்கமையவே கடந்த மே 31 ஆம் திகதி குறித்த கணனி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.