காணாமல் போன 3 மீனவர்களும் 21 நாட்களின் பின் மீட்பு

இயந்திரப் படகு சர்வதேச கடற்பரப்பில்

காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச்சென்று காணாமல்போன சாய்ந்தமருது மற்றும் காரைதீவைச் சேர்ந்த மூன்று மீனவர்களின் இயந்திரப்படகு யாழ்ப்பாணத்திற்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில் 21நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.  

இப்படகிலுள்ளவர்களை ஆழ்கடலிலிருந்து யாழ். கரைக்கு அழைத்துவரும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.  


தற்சமயம் 0222என்ற இலக்கமுடைய அப்படகு கடற்படையினரால் கட்டி இழுத்து வரப்படுவதால், இன்று இப்படகு கரையை வந்தடையலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  

காரைதீவு மாளிகைக்காட்டுத் துறையிலிருந்து கடந்த 18ஆம் திகதி ஆழ்கடலுக்கு இயந்திரப்படகில் சென்ற சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன் (வயது36), இஸ்மாலெவ்வை ஹரீஸ் (வயது37), காரைதீவைச்சேர்ந்த சண்முகம் ஸ்ரீகிருஸ்ணன் (வயது47) ஆகிய மூவரே இவ்விதம் கடலில் மாயமாகினர். கடந்த பல நாட்களாக பல கோணங்க ளிலும் தேடுதல் வேட்டைகள் நடைபெற்றும் அவை பலனளிக்கவில்லை.இப்பணிக்கென தரைப்படை, விமானப்படை, கடற்படை உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டன.  

இந்நிலையில், சர்வதேச கடற்பரப்பில் செயலிழந்த 0222 இலக்கமுடைய இயந்திரப்படகு ஒன்று மீனவர்களுடன் தத்தளிப்பதாகத் தென்பகுதி மீனவர்கள் சிலர் மாத்தறை கடற்படைத் தலைமையகத்திற்குத் தகவல் வழங்கியதன்பேரில் மீனவர்களை மீட்கும் முயற்சியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.