விடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்புதிருகோணமலையில் நேற்றிரவு கைதான கிளிநொச்சி, அம்பாள்குளம் இளைஞனின் வீட்டிலிருந்து ரி56 துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


 வெள்ளிக்கிழமை  (11) திருகோணமலை, சேருநுவர, கிளிவெட்டி பாலத்திற்கு அருகில், சேருநுவர இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் ஒருவர் ரி56 துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபர், சேருநுவர பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த ஜோசப் பீட்டர் எனவும், அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று  (12) கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள குறித்த நபரின் வீட்டில் கிளிநொச்சி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையில், அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த வீட்டிலிருந்த அவரது மனைவி என தெரிவிக்கப்படும் 23 வயதான பெண் ஒருவர் மற்றும் 28 வயதான அவரது சகோதரி ஆகியோரும் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதன் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள்
 • T56 ரக துப்பாக்கி 01
 • T56 துப்பாக்கி ரவைகள் 154
 • SFG 87 வகை கைக்குண்டுகள் 03
 • C4 வெடிபெருட்கள் சிறிதளவு
 • 9mm வகை தோட்டாக்கள் 62
 • 7mm வகை தோட்டாக்கள் 09
 • தூரத்திலிருந்து சுடக்கூடிய அரை தன்னியக்க ரைபல் 01
 • மெகசின் 01
 • டெட் கோட் 02
 • பல்வேறு வகையான டெட்டனேட்டர்கள் 62
 • MGM ரவைகள் 05
 • கத்தி 01
 • GPS 01
 • சோனி கெமரா 01
 • இரட்டை தொலைகருவி 01
 • மடி கணிணி 01
 • டொங்கல் 01
 • அன்டெனா 01
 • கையடக்க தொலைபேசிகள் 04
 • LTTE தலைவர் பிரபாகரனின் புகைப்படத்துடனான ரி-சேர்ட் 04
 • கறுப்பு முகமூடி 01
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.