தொடர்ந்தும் மழை - ஆலயங்களும் குடியிருப்புக்களும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

(வி .சுகிர்தகுமார் )
அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழ் நிலப்பிரதேசங்களும் ஆலயங்களும் குடியிருப்புக்களும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக தாழ் நிலப்பிரதேசங்களில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்ட நீர் வெளியேற்றும் பிரதான பிரதேசமான கடலுடன் இணையும் சின்னமுகத்துவார ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றப்படுகின்றது.

க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் வெள்ளத்தினால் மாணவர்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு முருகன் ஆலயம் ஸ்ரீ வீரம்மாகாளயிம்மன் ஆலயம் அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயம் விவேகானந்தா வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் வளாகங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தால் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக குடியிருப்புக்களுக்கு சென்றுள்ள நிலையில் மழை வீழ்ச்சி தொடருமானால்  மக்கள் மீண்டும் இடம் பெயர்வதுடன் தொழிலாளர்களின் தொழிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.