போதிய மழை இன்றேல் மின்வெட்டுக்கு நேரிடலாம்!


மின்சார பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை
மார்ச் மாதம் வரை போதியளவான மழை வீழ்ச்சி கிடைக்காவிடின் மின்வெட்டை மேற்கொள்ள நேரிடலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான மஹிந்த அமரவீரவிடமே, மின்சார பொறியியலாளர் சங்கம் இன்று (14) இதனை அறிவித்துள்ளது.

இப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க முன்னர், அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கான மாற்று வழியாக தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து போட்டி விலைக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய முடிமெனவும் அச்சங்கத்தின் தலைவர் அநுருத்த திலகரத்ன தெரிவித்தார்.

அத்தோடு இதற்கான நீண்டகாலத் தீர்வாக மிகப் பெரியளவிலான மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

தற்போது பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் குளிர் நிலை காணப்படுவதோடு பகலில் உஷ்ணம் நிலவுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதி வரை போதியளவான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாதென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.