வாக்களிக்கும் விகிதத்தில் பெரும் பின்னடைவை காட்டும் தமிழ் சமூகம்




Dr .ஆர்.சயனொளிபவன் & TEAM  
  • வடக்கு கிழக்கு மாகாணங்களில்  வாக்களிக்கும் விகிதம் 
  • சமூகங்களிற்கு இடையில் உள்ள வாக்களிப்பு விகிதம் 
  • பல சமூகங்கள் வாழும் கிழக்கில் வாக்களிப்பு விகிதத்தின் தாக்கம் 
  • வாக்களிப்பு விகிதத்தின் வீழ்ச்சிக்கான  காரணங்கள் 



வட கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லீம்,  சிங்கள சமூகசங்களிற்கு இடையே   வாக்களிக்கும் விகிதத்தில் பாரிய வேறுபாடுகள்  உள்ளதை தெளிவுபடுத்தும் நோக்கோடு மேலே உள்ள மாவட்டங்களும் தேர்தல் தொகுதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் முஸ்லீம் சமூகங்கள் பெரும்பாண்மையாக வாழ்ந்தாலும்   எமது நாடு சுதந்திரம் அடைந்த பின்பு திட்டமிட்ட  முறையில் ஏற்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றத்தின்  மூலம் உருவாக்கப்பட்ட இரு தேர்தல் தொகுதிகளான    கிழக்கின் வட மேற்கு பகுதியில்   திருகோணமலை மாவட்டத்தில் 1977இல் புதிதாக உருவாக்கப்பட்ட சேருவில தேர்தல்  தொகுதியும்   மற்றும் கிழக்கின் தென்மேற்கு பகுதியில் 1960இல் உருவாக்கப்பட்ட அம்பாறை தேர்தல் தொகுதியின்  உருவாக்கத்தின் மூலமும்  சிங்கள மக்களின் சனத்தொகையும்    கணிசமான அளவாக மாற்றம் பெற்றுள்ளது .

இக் குடியேற்றங்களை தொடந்து  கிழக்கு மாகாணம்    மூன்று சமூகங்கள்  கணிசமாக  வாழும் ஒரு பகுதியாகவும்  மாற்றம்  பெற்றுள்ளது. மேலும் இவ்வாறான  ஒரு பகுதியில்  சமூகங்களுக்கிடையே    அளிக்கப்படும் வாக்களிப்பு  விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படும்  போது அது எவ்வாறு அப்பகுதியில் உள்ள சமூகங்களின்   மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும்  என்பதனை  2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் ஊடாக பார்க்கக்கூடியதாகம்  உள்ளது.

சமூகங்களிற்கு இடையில் உள்ள வாக்களிப்பு விகிதம்

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியாக பட்டிருப்பும் (அண்ணளவாக 99% தமிழ் மக்களையும்) முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியாக சம்மாந்துறையும் ( அண்ணளவாக 85% முஸ்லீம் மக்களையும்) சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியாக அம்பாறை (அண்ணளவாக  99% சிங்கள மக்களையும் )தேர்தல் தொகுதியையும் பார்ப்போமாயின் கடந்த மூன்று தேர்தல்களிலும். பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு விகிதம் முறையே 60%, 62%, 71%  சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு விகிதம் 68%, 69%, 79%
அம்பாறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு விகிதம் 75%, 78%, 87% எனவும் அமைந்துள்ளது. இத் தரவுகளின் படி தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதம் மிகவும் குறைவானதாகவும் சிங்கள மக்களின் வாக்களிப்பு விகிதம் மிக கூடுதலானதாகவும்   உள்ளதையும் தெளிவுபடுத்துகின்றது.


பல சமுகங்கள் வாழும் கிழக்கில் வாக்களிப்பு விகிதத்தின் தாக்கம்



பாராளுமன்ற தேர்தல் 2015 - கிழக்கு மாகாணம் 

                                                            மாகாண            பாராளுமன்ற உறுப்பினர்கள் 
                                            சனத்தொகை விகிதம்                     எண்ணிக்கை
தமிழ் சமூகம்                                  38% - 39%                                            5

முஸ்லீம் சமூகம்                           38%-39%                                              7

சிங்கள சமூகம்                                  22%                                                  4

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் முஸ்லீம் சமூகங்களை பொறுத்த அளவில் சனத்தொகையில்  அண்ணளவாக சமமான   நிலையில் இருந்தாலும்  பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பொறுத்தளவில்  பாரிய இடைவெளியை காணக்கூடியதாகவும்  உள்ளது.  மேலும் தமிழ் சிங்கள சமூகத்தின் சனத்தொகையை  ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழ் சமூகத்தின் சனத்தொகையானது  அண்ணளவாக இரு மடங்காக இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆகவும்   சிங்கள சமூகத்தை பொறுத்தளவில் மாகாண சனத்தொகை அளவில் 22% அளவிலான சனத்தொகையை கொண்டிருந்தும்   பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆகவும் உள்ளது. இவை யாவற்றிட்கும் மிக  முக்கியமான  காரணமாக  தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதமே உள்ளது.



வாக்களிப்பு விகிதத்தின் வீழ்ச்சிக்கான  காரணங்கள் 

தமிழ் மக்கள் அளிக்கும் வாக்களிப்பு விகிதத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் 

  • போரின் பின்னரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கணிசமான அளவு இளைஞர்கள்  நாட்டை விட்டு வெளியேறிவருவதனாலும்  
  •  தமிழ் மக்கள் கூடுதலாக வாழும் பகுதிகளின் பொருளாதாரம்  நீண்ட போரின் காரணமாக பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதாலும் குறிப்பாக இளம் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் வாழ்வாதாரத்திற்காக  தாம் வசிக்கும் பகுதிகளை விட்டு வெளிநாடு மற்றும் உள் நாட்டின்  நகர் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளமையும்
  • நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் கடந்தும் தமிழ் அரசியல் கட்சிகளால்  இதுவரை எந்தவொரு அரசியல் தீர்வையும் பெறமுடியாமை மேலும் இதன் காரணமாக தமிழ் மக்கள் தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியலில் நம்பிக்கை இழந்த தன்மை. குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் கிழக்கில் உள்ள தமிழ்   நகர் பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்களின்  வாக்களிக்கும் விகிதத்தில் பாரிய வீழ்ச்சியை காணக்கூடியதாகவும்  உள்ளது.
  • கிராமப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் ஒரு போராட்டமாக உள்ளதாலும் தேர்தல் தினங்களில்  வாக்களிக்க செல்வதை விட வேலைக்கு செல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதனாலும் மேலும் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதில் உள்ள போக்குவரத்து இடர்பாடுகள் வாக்களிக்க  செல்வதற்குரிய   முக்கிய தடங்கலாக உள்ளன.
  • தமிழ் அரசியல் கட்சிகளால் தேர்தல் களத்தில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் தன்மை வாக்களிப்பை ஊக்குவிக்காமை 
  • போர் காலங்களில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் பாதுகாப்பு வலயம் மற்றும் பாதுகாப்பு படையினரின் நிலைகளை அமைப்பதற்காக  அரசாங்கத்தால் தம்வசப்படுத்தப்பட்டமை .  இதன் தாக்கத்தை யாழ் மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை  தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு விகிதத்தில்  காணக்கூடியதாகவும்  உள்ளது. காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின்  வாக்களிப்பு விகிதம் 39%, 42%, 46% மாகவும் உள்ளது. மேலும் இவ் விகிதமானது நாட்டில் அளிக்கப்படும்  மிக குறைந்த வாக்களிப்பு விகிதம்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. 
தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதத்தை  முஸ்லீம் மக்களின் வாக்களிப்பு விகிதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 7% அளவிலான வீழ்ச்சியையும் மேலும்  தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதத்தை சிங்கள மக்களின் வாக்களிப்பு விகிதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 14% அளவிலான வீழ்ச்சியையும்  காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தை பொறுத்த அளவில் தமிழ் சமூகத்தின் சனத்தொகையானது முஸ்லீம் சமூகத்தின் சனத்தொகையிற்கு சமமா க இருந்தும் 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை  பார்க்கும் போது தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 2 குறைவாகவே உள்ளது .


முஸ்லீம் மக்களின் வாக்களிப்பு விகிதம் 

  • முஸ்லீம் சமூகத்தை பொறுத்த அளவில் அவர்களும்  போர் காலத்தில் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்ததும்  தெரிந்ததே குறிப்பாக   போர்   காலப்பகுதியில்  யாழ்ப்பாணம் மற்றும் மன்னார்  பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளப்பகுதியிற்கு சென்றிருந்தாலும்  அவர்களுக்கென   பிரத்தியோகமாக வாக்களிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படுவதனாலும். 
  • முஸ்லீம் அரசியலை பொறுத்த அளவில் கடந்த 3 சகாப்தங்களாக தமது சமூகத்தின் அபிவிருத்தியை மையமாக கொண்டு பயணிப்பதனால் முஸ்லீம் அரசியலால் தமது சமூகத்திற்கு  பாரிய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள கூடியதாகவும்  இருந்தது. இதன்  பிரதிபலனாக வாக்களிப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் என்பனவற்றின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளதாலும் 
  • முஸ்லீம் சமூகத்தின் சனத்தொகையில் மிக  கூடுதலானோர் நகரங்களை அண்டிய பகுதிகளில் வாழ்வதனாலும் வாக்களிப்பு நிலையங்கள் மிக குறுகிய தூர இடைவெளிகளில் உள்ளதாலும்.

இவர்களின் வாக்களிப்பு விகிதம் தமிழ் சமூகத்தை விட 7% அளவில் அதிகாகமாக காணப்படுகின்றது.

ஆனால் கிழக்கில் உள்ள சிங்கள சமூகத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது முஸ்லீம் சமூகத்தின் வாக்களிப்பு விகிதம் 8% அளவில் குறைவாகவும்  உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக உள்ள விடயம்

  • முஸ்லீம் சமூகத்திலும் ஒரு பகுதியினர் வேலைவாய்ப்பிற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கும்  அத்தோடு  உள்நாட்டில் உள்ள வெளிமாவட்டங்களுக்கும் செல்வதானாலும். மேலும் வெளிமாவட்டங்களில் வியாபார முயற்சிகளுக்காக செல்பவர்கள்  என ஒரு தொகுதியினர் தேர்தல்  வாக்களிப்புகளில் பங்கு கொள்ளாமை என்பனவே முக்கிய காரணங்களாக உள்ளன .


சிங்கள மக்களின் வாக்களிப்பு விகிதம்


வடக்கு கிழக்கை பொறுத்தளவில் சிங்கள மக்களின் பெரும் தொகையானோர் கிழக்கில் உள்ள இரு தேர்தல் தொகுதிகளிலுமேயே   வாழ்கின்றனர். மேலும் கிழக்கில் உள்ள சிங்கள சமூகத்தின் வாக்களிப்பு விகிதம் ஏனைய  இரு சமுகங்களும் அளிக்கும் வாக்குவிகிதத்தை விட  அதிகமாக உள்ளதற்குரிய   முக்கிய காரணங்களாக

  • நாட்டின் சுதந்திரத்தின் பின்பு கிழக்கின் இரு முனைகளிலும் உள்ள வளமுள்ள பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளது மட்டுமல்லாது இவர்கள்  வாழும் நிலப்பரப்புகளில் பெரும்பகுதி வளமுள்ளதாகவும் காணப்படுகின்றது அந்தவகையில் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை தத் தமது பகுதிகளிலேயே உருவாக்கியுள்ளனர். மேலும் இப் பகுதிகளில் வாழும் மக்களில் கூடுதலானோர் வேலை வாய்ப்புகளுக்கென வெளிஇடங்களுக்கு செல்லவேண்டிய அவசியமும்   மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
  • போர் காலத்தில்  சிங்கள சமூகம்  மற்றைய இரு சமுகங்களையும் விட குறைத்த அளவு தாக்கத்தை எதிர் கொண்டதாலும்  மேலும் சிங்கள சமூகத்திற்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாலும். இவர்கள் பாரிய அளவில் இடம்பெயரவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.
  • இப் பகுதிகளில் வாழும் சிங்கள சமூகம் அரசியல் பொறிமுறையின் ஊடாக முஸ்லீம் சமூகத்தை விட பாரிய நன்மைகளை அனுபவிப்பதனாலும்  மேலும் இப் பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  தொடர்ந்து வரும் அரசுகளால் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதாலும் கிழக்கில் உள்ள சிங்கள சமூகம்  வாக்களிப்பில் பாரிய நாட்டத்தை காட்டுகின்றனர்.


பெரும் பின்னடைவுகளை சந்தித்து வரும் தமிழ் சமூகம் வாக்களிப்பு விகிதத்திலும் பின் நிலையிலேயே உள்ளது. வாக்களிப்பு விகிதத்தின் வீழ்ச்சியானது தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது மட்டுமல்லாது சமூகத்தின் சரியான பிரதிபலிப்பையும் தென்படுத்த தவறியும் உள்ளது . பல சமுகங்கள் வாழும் கிழக்கு மாகாணம் போன்ற ஒரு பகுதியில் வாக்களிப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது தொடர்ச்சியாக தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், தமிழ் பகுதிகளில் அடிப்படை கட்டுமானம் போன்ற மனித வாழ்க்கைக்கு முக்கியமான காரணிகளின் வளர்ச்சியிலும் தடைகளை ஏற்படுத்தியுள்ளது .

தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணைத்து அரசியல் கட்சிகளுக்கும்  தமது  மக்களின் வாக்களிப்பு விகிதத்தை முன்னேற்றுவதற்குரிய  முக்கிய பங்கு   உள்ளது அந்த வகையில் தமிழ் அரசியல் கட்சிகள் தமது பங்காக மக்களுக்கு அரசியல் மற்றும் வாக்களிப்பில்  நம்பிக்கையை  வளர்க்க கூடியவகையில் தமது அரசியல் கொள்கைகளில்  காலத்திற்கு ஏற்றவகையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய தலையாய கடமைப்பாட்டில் உள்ளனர் . இதனைவிட குறிப்பாக கிராமப்புறங்களில்   வாழும் மக்களுக்கு வாக்களிப்பின்  முக்கியத்துவத்தை எடுத்து கூறுதல் மேலும் வாக்களிப்பில் உள்ள இடர்பாடுகளை களையும் வகையில் செயற்திட்டங்களை வகுத்து வெற்றியளிக்கும் விதத்தில் முன் எடுத்து செல்வதன் மூலம் தமிழ் சமூகத்தின் வாக்களிப்பு விகிதத்தையும் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவதையும் அதிகரிக்கமுடியும்.

Dr .ஆர்.சயனொளிபவன் & TEAM