அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு கண்டனம் !

(பாறுக் ஷிஹான்)
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளர் பஸீரா றியாஸ் குறிப்பிட்டார்.
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அண்மைக்காலமாக மிக சிறப்பாக கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர்.தேவாமிர்ததேவிக்கு இழைக்கப்பட்டு வரும் செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து கல்முனையில் ஞாயிற்றுக்கிழமை(8) நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை காலா காலமாக பல சர்ச்சைக்கு பெயர் போனதை பலரும் அறிவர்.இங்கு அரசியலை பின்தளமாக கொண்ட ஊழல்கள் இடம்பெற்று வருகின்றது.அதே வேளை அவ்வரசியல் அதிகாரத்தினால் கொண்டு வரப்பட்ட வைத்திய அத்தியட்சகர் ஒருவரின் அராஜகங்கள் காரணமாக ஒரு பெண் தற்போது பாதிக்கப்பட்டு இருக்கின்றார்.

குறித்த அராஜகத்தை நான் வண்மையாக கண்டிப்பதுடன் விசேட தர தாதிய உத்தியோகத்தர் செல்வி ஆர்.தேவாமிர்ததேவி 2017 ஆண்டு தனது கடமையை இந்த வைத்தியசாலையில் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு இடையூறுகளுக்கு முகம்கொடுத்து வருகின்றதை அறியமுடிகிறது.

அண்மையில் கூட குறித்த தாதிய மேற்பார்வையாளரை வைத்திய அத்தியட்சகர் மோசமான வார்த்தை பிரயோகங்களினால் திட்டியுள்ளார். இந்த செயற்பாட்டை தொடர்ந்தும் வைத்திய அத்தியட்சகர் ஏ. எல். எஃப் .ரகுமான் என்பவரே முன்னெடுத்து வருகிறார்.இவர் ஒரு முக்கிய பதவியில் இருந்து கொண்டு அப் பெண்ணை சட்டரீதியாக அணுகாமல் மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டி அவரது கடமைக்கு தினமும் இடையூறு செய்வதை பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவள் என்ற ரீதியில் வன்மையாக கண்டிக்கின்றேன்.இவ்வாறான செயற்பாட்டிற்கு சட்டநடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார்.