திருகோணமலையில் போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

யாழ். அரியாலையில் சுவிட்சர்லாந்து போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் குடும்பத்தாருடன் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

திருகோணமலை – உப்புவௌி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.

போதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.

குறித்த போதகர் நேற்றிரவு அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வரை உடல்நலத்துடன் இருப்பதாகவும் டொக்டர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.

எனினும், அரியாலையிலிருந்து திரும்பியதும் இவருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் தற்போது ஆராயப்படுகிறது.

யாழ். அரியாலை பகுதியில் சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்த போதகர் ஒருவரால் ஆராதனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், அவர் கொரோனா தொற்று காரணமாக தற்போது சுவிட்சர்லாந்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் குறித்த போதகருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனாத் தொற்று நோயாளியாக அடையாளங்காணப்பட்டார்.

இதனால் சுவிஸ் போதகருடன் தொடர்புகளைப் பேணியவர்களையும் ஆராதனையில் கலந்துகொண்டவர்களையும் பதிவு செய்யுமாறு சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.